
முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் லஞ்ச, ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொலிஸ் உதவிப் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபில் ஆகியோரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்னேவா பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முறைப்பாட்டாளர் ஒரு நெல் அறுவடை இயந்திரத்தை வாங்கியுள்ளார். அது அவர் வாங்கிய உரிமையாளருக்கு சொந்தமானது அல்ல. எனவே, கல்னேவா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவிப் பரிசோதகர் (எஸ்.ஐ) மற்றும் கொன்ஸ்டபிள் இருவரும், சட்ட நடவடிக்கை எடுக்காமல் பிரச்சினையைத் தீர்க்கவும், முறைப்பாட்டாளரிடம் 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நேற்று (01) காலை கல்னேவா பொலிஸ் நிலையம் அருகே – குறித்த லஞ்சத் தொகையைப் பெற்றுக் கொண்ட போது – லஞ்ச, ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து – கெகிராவ நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டமையை அடுத்து, சந்தேக நபர்களை மார்ச் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.



