
புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர மற்றும் அவரின் மகன் ஆகியோர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட (illegally assembled) வாகனம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக வந்தபோது – அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளை (19) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெப்ரவரி 6 ஆம் திகதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினருமான சாந்த அபேசேகர பயன்படுத்தியதாகக் கூறப்படும் சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு வாகனம், பிரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருப்பது – சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர – சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட சொகுசு வாகனத்தைப் பயன்படுத்துவதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அதன்படி, தொடர்புடைய தகவல்களை பல நாட்கள் விசாரித்த பின்னர், வாகனத்தைக் கைப்பற்ற அதிகாரிகள் குழு புத்தளத்திற்கு அனுப்பப்பட்டது.
இருப்பினும், வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் விசாரணையில் அது பிரிக்கப்பட்டு இரண்டு தனித்தனி இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
வாகனத்தின் பாகங்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான தென்னந்தோட்ட வளவிலும், அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. வாகனத்தின் செஸிஸ் உள்ளிட்ட வேறு சில பாகங்கள் அருகிலுள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில் இயந்திரம் உட்பட மேலும் பல வாகன பாகங்கள் மேற்கூறிய இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் விவசாயத் திணைக்களத்தினால் ஏற்கனவே பயன்படுத்தப்படும் ஒரு வாகனத்தின் எஞ்சின் மற்றும் செஸிஸ் எண்களைப் பயன்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய வாகனத்தில் இந்த எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதும் தெரியவந்துள்ளது.



