தலைப்புச் செய்திகள்

யூனானி தினம்: திருகோணமலையில் 26ஆம் திகதி கொண்டாடப்படுகிறது

– றிசாத் ஏ காதர் –

2025ஆம் ஆண்டுக்கான யூனானி தினம் திருகோணமலையில் எதிர்வரும் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதனை இலங்கை யூனானி மருத்துவ உத்தியோகத்தர்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.

‘யூனானி மருத்துவத்தின் மூலம் இயற்கையான குணப்படுத்தலும் நிலையான ஆரோக்கியமும்’ எனும் தொனிப்பொருளில் – குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை யூனானி மருத்துவ உத்தியோகத்தர்கள் சம்மேளனத்தின் யூனானி தின ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டொக்டர் ஏ.டப்ளியூ.எம். மாஸாத் தெரிவித்தார்.

யூனானி மருத்துவத்தின் பாரம்பரிய சிறப்பையும் அதன் அறிவியல் அடிப்படையிலான பயன்பாடுகளையும் முன்னிறுத்தும் வகையில் ‘யூனானி மருத்துவத்தின் மூலம் இயற்கையான குணப்படுத்தலும் நிலையான ஆரோக்கியமும்’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இந் நிகழ்வு, இயற்கை சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, யூனானி மருத்துவத்தின் வளர்ச்சியிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் கவனத்தை செலுத்தும் எனவும் டொக்டர் மாஸாத் கூறினார்.

திருகோணமலை ஜெகப் கடற்கரை விடுதியில் 2025.02.26ஆந் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்னசேகர கலந்து சிறப்பிக்கவுள்ளார். விசேட அதிதியாக சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் டொக்டர் எம்.ஏ. நபீல் கலந்துகொள்வார்.

இலங்கை யூனானி தின நிகழ்வுகள் ஐந்து (05) அம்சங்களைக் கொண்டு அலங்கரிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பிரதம அதிதி அமர்வில், யூனானி மருத்துவத்தின் வளர்ச்சி, அதன் சமூகப் பயன்பாடுகள் மற்றும் மக்களின் நலனில் அதன் பங்களிப்பு குறித்து சிறப்புரைகள் வழங்கப்படவுள்ளது.

மருத்துவ ஆராய்வு அமர்வில் – யூனானி மருத்துவ முறைகள் அதன் பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

விசேட ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் விரிவுரைகள் அமர்வில் – யூனானி மருத்துவர்கள், வைத்திய கலாநிதிகள், சிறப்பு வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளை விபரிப்பதுடன், புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய விவாதங்களும் நடைபெறும்.

பங்காளிகளுக்கான கௌரவ அமர்வில் – யூனானி மருத்துவத் துறையில் சிறப்பாக பணிபுரியும் மருத்துவத்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் சிறப்பு விருதுகள் மூலம் கௌரவிக்கப்படவுள்ளனர்.

நிகழ்வின் இறுதி அமர்வாக நூல் வெளியீடுகள் இடம்பெறவுள்ளன. அந்த நூல்கள் யூனானி மருத்துவத்துறையின் அபிவிருத்திகளை நோக்காகக் கொண்ட புத்தகங்கங்களாக அமையப்பெறும்.

யூனானி தின நிகழ்வானது – யூனானி மருத்துவ முறையின் மருத்துவப் பயன்களை விளக்கி, அதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதுடன் – யூனானி தொடர்பாக மக்கள் மனங்களில் உள்ள பொய்மைகளை அகற்றி, அது தொடர்பான தேடலை இன்னும் விரிவுபடுத்தும் ஒரு அமர்வாக அமையும்.