
– தில்சாத் பர்வீஸ் –
ஐஸ் போதைப் பொருள், இலத்திரனியல் தராசு, 8,93,840 பணத்துடன் பெண் ஒருவரும், ஒரு தொகை கேரளக் கஞ்சாவுடன் ஆண் ஒருவரும் நிந்தவூர் பகுதியில் கடந்த நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் தலைமையில் நடந்த திடீர் சோதனை நடவடிக்கை – இன்று (15) சனிக்கிழமை இடம்பெற்றது.
இச்சோதனை நடவடிக்கையில் கல்முனை, சம்மாந்துறை, சவளலக்கடை, பெரியநீலாவனை, சாய்ந்தமருது, காரைதீவு போன்ற பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் பொலிஸார் மற்றும் காரைதீவு ராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சோதனையிட்டனர்.
இதன்போது போது 29 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 22 வயது மதிக்கத்தக்க ஆண் கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த பெண்ணின் வீட்டினை சோதனை செய்த வேளையில் – ஒரு தொகை ஐஸ் போதைப் பொருள், போதைப் பொருட்களை நிறுக்க பயன்படும் இலத்திரனியல் தராசு ஒன்று, போதைப் பொருள் வியாபாரத்தில் பெறப்பட்டதாகச் சந்தேகப்படும் 8,93,840 ரூபாய் பணம் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆணின் வீட்டினை சோதனை செய்த வேளையில், ஒரு தொகை கேரளக் கஞ்சா மீட்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பாருங்கள்



