
தேசிய சுதந்திர தின நிகழ்வு – நேற்று (04) கொழும்பில் நடைபெற்ற போது, அங்கு படம் எடுக்கச் சென்றிருந்த யூடியுபர் (youtuber) ஒருவரை – பாதுகாப்பு தரப்பினர் படம் எழுக்க வேண்டாம் எனக் கூறி பிடித்து இழுத்துச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து இலங்கையில் ஊடக சுதந்திரத்தக்கு அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டு, குறிப்பிட்ட தனது யூடியுப் பக்கத்தில் சம்பந்தப்பட்ட யூடியுபர் பதிவொன்றை இட்டுள்ளதோடு, அதே தொனியில் வேறு சில யூடியுபர்களும் பதிவுகளை இட்டிருந்தனர்.
இந்த நிலையில் ஊடகவியலாளர் கலாவர்ஷினி கனகரட்னம் – எழுதியுள்ள பதிவொன்றை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.
கலாவர்ஷினி எழுதியுள்ளது என்ன?
சுதந்திர தின நிகழ்வுகளை பதிவுசெய்த youtuber ஒருவரை இழுத்துச்சென்று வெளியே தள்ளினர் என ஒரு முகப்புத்தக பதிவை பார்த்தேன். புகைப்படத்தையும் அந்த பதிவாளர் போட்டிருந்தார்.
விடயம் என்னவென்றால், அதன் பின்னரான பதிவுகளில் பெரும்பாலானவை ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது, ஊடகவியலாளர் தடுக்கப்பட்டார், தரதரவென இழுத்துச்செல்லப்பட்டார், செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது எனக் காணப்பட்டது.
ஊடக சுதந்திரம் பறிக்கப்படுகையில் குரல்கொடுக்கும் நாம், அவ்வாறு நடைபெறாத சந்தர்ப்பங்களில், நடைபெற்றதாக பரப்பும் செய்திகள் பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும். காரணம், இது நாட்டிற்குள் தேவையற்ற முரண்பாடுகளை தோற்றுவிக்கலாம், மக்களுக்கு பிழையான பிம்பத்தை வழங்கலாம்.
முதலாவது, அரச நிகழ்வுகளை பதிவுசெய்வதற்கு கட்டாயம் முன் அனுமதி பெறவேண்டும். சுதந்திர தினம், புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறும் நிகழ்வு, அமைச்சர்கள் நியமனம், வெளிநாட்டு தலைவர்களின் விஜயம், முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து ஆகியன பெரும்பாலும் நிகழ்வுகளாக நடைபெறும். அரசாங்க தகவல் திணைக்களம், அல்லது சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்தின் ஊடகப் பிரிவு முன்கூட்டியே அதற்கான அறிவித்தலை சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்திற்கு வழங்கும். அதில், சகல விபரங்களும் குறிப்பிடப்பட்டு, உங்கள் நிறுவனம் சார்பாக ஒரு செய்தியாளர், புகைப்பட ஊடகவியலாளர், அல்லது வீடியோ பதிவாளரை அனுப்புமாறு கோரப்பட்டிருக்கும். அவர்களது தரவுகளை அடையாள அட்டை சகிதம் நிரப்பி அனுப்புமாறும் கோரப்படும். இல்லாத சந்தர்ப்பங்களை, நீங்கள் முறைப்படி எழுத்துமூலம் கோரிக்கை விடுத்து அனுமதியை பெற்றுக்கொள்ளலாம். நிகழ்வினை பொறுத்து, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ஊடகவியலாளர்களை வருமாறு கோருவர், அங்கிருந்து வாகன வசதிகளை வழங்குவர். (நிகழ்வு மற்றும் இடத்தை பொறுத்தது. எல்லாவற்றிற்கும் வழங்க மாட்டார்கள்)
காரணம் என்ன?
இவ்வாறான நிகழ்வுகளில் பூனைக்குட்டி போல அங்கும் இங்கும் ஓடி வீடியோ எடுக்கும்போது அது அனைவருக்கும் சிரமம். எதுவும் ஒழுங்காக நடைபெறாது. பாதுகாப்பு தொடர்பாகவும் கரிசனையுண்டு, ஊடகவியலாளர் என கூறிக்கொண்டு யாரேனும் விசமியொருவர் வந்தால்?
ஊடகவியலாளர்களுக்கு என பிரத்தியேகமான ஒரு இடத்தை ஒதுக்கியிருப்பார்கள். அங்கு கெமராவை பொருத்திக்கொண்டு, சிரமமின்றி செய்தி சேகரிக்க முடியும், பதிவுசெய்ய முடியும். முக்கிய வெளிநாட்டு அரச தலைவர்கள் வருகையில், விமான நிலையத்தில் அதனை பதிவுசெய்ய அனுமதி கிடைக்கும். அப்போதெல்லாம், எமக்கு தனியாக ஒரு நகரும் இயந்திரத்தை/வண்டியை ஒதுக்கிவைத்திருப்பர். அங்கும் இங்கும் கொண்டுபோய் கெமராவை வைத்திருக்க வேண்டியதில்லை, நாமும் அங்கும் இங்கும் ஓட வேண்டியதில்லை. இதுதான் நடைமுறை.
ஆக, ஊடக அடையாள அட்டை வைத்திருக்கின்றோம் என்பதற்காக கண்ட கண்ட இடத்தில் கெமராவை தூக்க முடியாது. வரையறைகள் உண்டு. அது எமது வசதிக்காகவும்தான்.
அடுத்தது, ஊடகவியலாளர்களா என்ற கருத்தாடல் நடைபெறுகின்றது பொதுவாக ஒரு செய்தியாளர், (உண்மையான செய்தியாளர்) தான் ஒரு விடயத்தை வெளியிடும்போது எத்தனை லைக், எத்தனை வீவ் என பார்ப்பதில்லை. எவ்வளவு காத்திரமான ஒரு விடயத்தை வழங்கியுள்ளோம் என்பதைத்தான் பார்ப்பார். செய்தி அல்லது ஒரு செய்திக்கதை என்பது ஒரு கட்டிடம் போன்றது. அதனை படிப்படியாக கட்டியெழுப்பி வெளிப்படுத்த வேண்டும். ஒரு காத்திரமான கதைக்கு பல்வேறு மூலங்கள், எடுகோள்கள், நிபுணர் கருத்து, கண்டுபிடிப்புகள், அதனை முன்வைக்கும் விதம், வார்த்தைப் பிரயோகம், அடுத்து gatekeeping Process என பலவகையுண்டு. (நான் AI ஊடகவியலாளர்களை குறிப்பிடவில்லை).
ஒரு செய்தியை வெளியிடுகையில், இதனால் சமூகத்தில் எதிர்மறை தாக்கம் ஏற்படுமா, குழப்பங்கள் ஏற்படுமா என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். அதனை வரையறுக்கும் ஒழுக்க நெறிமுறையை கையாள வேண்டும்.
ஆனால், சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடுவோர் அல்லது தகவல் உருவாக்குநர்களுக்கு அது இல்லை. (அவர்களுக்கும் சுய ஒழுங்குபடுத்தல் – self regulation அவசியம்). ஆனால், அவர்களுடைய எதிர்பார்ப்பு பெரும்பாலும் லைக், வீவ், பணம் – Money making process. அவ்வாறு இல்லையென சிலர் கூறலாம், ஆனால் பெரும்பாலும் அதுதான்.
அடுத்தது, ஊடகங்களில் வேலை செய்தவர்கள் அல்லது வேலை செய்வோர் ஊடகவியலாளர்களா? இல்லை. ஊடகவியலாளர் செய்தியுடன் தொடர்புடையவர். ஊடகத்தில் செய்தி மட்டும் பணியல்ல. அந்தந்த ஊடக வகையை பொறுத்து பணிகளும் மாறுபடும். வைத்தியசாலையில் பணியாற்றும் அனைவரும் வைத்தியர்கள் இல்லைதானே? அதுபோலத்தான்.
ஏன் இவ்வாறான குழப்பங்கள்?
எமது நாட்டில் ஊடகத்துறை முறையாக ஒழுங்குறுத்தப்படாமையே இதற்குக் காரணம். இதனால், முறையான ஆட்சேர்ப்பு இடம்பெறாமல், சமூக ஊடகங்களில் பிரபலமானோர் அல்லது வீடியோ போடுவோரை தேடிப்பிடித்து ஊடகவியலாளர்களாக பணிக்கமர்த்தும் செயற்பாட்டினை சில பெரிய ஊடக நிறுவனங்களும் செய்கின்றன. அதனால் உண்மையான ஊடகவியலாளர்களின் பெயரும் கெட்டுப்போய்விடுகின்றது. இதுதான் ஊடகவியலா என்ற ஒரு பிம்பத்தை சமூக மட்டத்தில் ஏற்படுத்தி விடுகின்றது. ஊடகம் என்றால் காணப்பட்ட மதிப்பும் மரியாதையும் கணிசமான அளவு இப்போது குறைந்து போய்விட்டது என்றே கருதுகின்றேன்.
ஒரு உதாரணம்
ஈஸ்டர் தாக்குதலின்போது, இரண்டு நாட்கள் வெளியே வரமுடியாமல் செய்தியறைக்குள் முடங்கியிருந்த நாம் இரண்டாம் நாள் இரவு வெளியேறுகையில், பம்பலப்பிட்டி பொலிஸார் தடுத்து நிறுத்தினர். விசாரிக்கும்போது, நாம் ஊடகவியலாளர் என என்னுடன் இருந்த யாரோ கூறிவிட்டார். ஊடகவியலாளர் என்றால் குண்டு வெடிக்காதா? நடங்கடா ஸ்டேசனுக்கு என அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். அப்போது, ஊடக அடக்குமுறை அல்லது ஊடகவியலாளர்களை தடுத்துவிட்டனர் என செய்தி போட முடியுமா? அது எமது பாதுகாப்புக்குத்தான் என்பதை நாம் உணரவேண்டும்.



இதையும் பாருங்கள்



