
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை – அவர் வசித்து வரும் விஜேராம இல்லத்தை காலி செய்யுமாறு கோரி, கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
“நாங்கள் கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை மக்கள் அவரை வீட்டை காலி செய்யுமாறு கேட்டு கடிதங்களை அனுப்பலாம்” என்றும் கூறியுள்ளார்.
அரசாங்கம் ஏன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு, வீட்டை விட்டு வெளியேறுமாறு எழுத்துபூர்வமாக அறிவிக்கவில்லை என, ஊடகவியலாளர் கேட்டமைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்த விடயங்களைக் கூறினார்.
அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மஹிந்த ராஜபக்ஷவை தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யுமாறு கோரினால், மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயாராக இருப்பதாக, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பைக் குறிப்பிட்டு, ஒரு சட்டத்தரணியாக மஹிந்த ராஜபக்ஷவின் நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும் என அமைச்சர் நலிந்த கூறியுள்ளார். “அவருடைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ – கடிதம் இல்லாமல் தனது இல்லத்தை காலி செய்ய முடிமென்றால், மஹிந்த ஏன் அதற்காகக் காத்திருக்கிறார்?” என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய மனைவி ஆகியோருக்கு பொருத்தமான மாற்று வசிப்பிடமொன்றை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
இதையும் பாருங்கள்



