
இலங்கையில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் மொத்தம் 3,477 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மனித – யானை மோதல் குறித்து விவரிக்கையில் சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக்க படபெந்தி இந்த புள்ளிவிவரங்களை கூறினார்.
2015 முதல் 2019 வரை மொத்தம் 1,466 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், 2020 முதல் 2024 வரை இந்த எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த மோதலில் கணிசமான மனித உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் காட்டு யானைகள் தாக்குதல்களால் மொத்தம் 1,190 மனித இறப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில், 2015 முதல் 2019 வரை 456 இறப்புகள் நிகழ்ந்தன. மேலும் 2020 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 734 இறப்புகள் நிகழ்ந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சனின் கேள்விக்கு பதிலளித்த சுற்றாடல் அசைமச்சர், இந்தப் பிரச்சினையின் சிக்கலான தன்மையை ஒப்புக்கொண்டு, மனித – யானை மோதலைத் தீர்ப்பதற்கு காலம் எடுக்கும் என்று மீண்டும் வலியுறுத்தினார். இந்த விஷயத்தை நிவர்த்தி செய்வதில் வனவிலங்கு பாதுகாப்புத் துறை எதிர்கொள்ளும் சவால்களையும் அவர் எடுத்துரைத்தார்.
காட்டு யானைகளையும் மனிதர்களையும் கடுமையாகப் பாதித்துள்ள இந்த அவசரப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் போதுமான நிதி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இதையும் பாருங்கள்



