புதிய அரசாங்கத்தில் சுமந்திரனுக்கு வெளி விவகார அமைச்சர் பதவி

🕔 November 2, 2024

பொதுத் தேர்தலை அடுத்து அமையவுள்ள அரசாங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை – வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதற்கு, ஜனாதிபதியும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் ஒப்பந்தம் செய்துள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

சுமந்திரனின் அமைச்சுப் பதவியை தாம் மதிக்கும் அதே வேளையில், அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் இரண்டு நிபந்தனைகள் குறித்து கவலையடைவதாக கம்மன்பில தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“முதல் நிபந்தனை என்னவென்றால், இலங்கையை ஒரு கூட்டாட்சி நாடாக ஆக்கி, புதிய அரசியலமைப்பை அமுல்படுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார். இந்த அணுகுமுறை நாட்டின் மக்களை இன ரீதியாக பிரிக்கும் பிரிவினைவாதத்துடன் ஒத்துப்போகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது நிபந்தனையின் கீழ், இலங்கைக்கு எதிரான 2015ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (UNHRC) தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, ‘போர்வீரர் வேட்டை’ என்று விவரித்ததைத் தொடங்குவதற்கு ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“வரலாற்றில் எந்த அரசாங்கமும் தனது முதல் மாதத்திற்குள் அரசியல் கூட்டாளிகளைப் பாதுகாக்க இவ்வாறு செயல்பட்டதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் இந்த விடயங்கள் குறித்து குறிப்பாக அக்கறை கொள்ள வேண்டும்” எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் தொடர்புள்ள பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவை பதவி நீக்கம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் கோரிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் கம்மன்பில மேலும் அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்