200 கோடி ரூபாய் பெறுமதியான ஹேரோயின் கிரிவெவ பகுதியில் சிக்கியது: கணவன் – மனைவி கைது
இரண்டு பில்லியன் ரூபாய் பெறுமதியான 53.65 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள், செவனகல, கிரிவெவ பிரதேசத்தில் நேற்று (31) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேற்படி போதைப்பொருள் பிளாஸ்டிக் கொள்கலன்களில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரி வெவ, நுகே கலயாய, 1வது லேன் பகுதியில் அதிரடிப்படையினர் குழுவொன்று சோதனை நடத்திய போது, இந்த போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலத்தை அதிகாரிகள் சோதனை செய்ததில், முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53 கிலோ 65 கிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர், ஒக்டோபர் 30ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் முன்னர் கைது செய்யப்பட்ட ஒமல்பகே தம்மிக்க சமன்குமாரவின் சகோதரி என்பதும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அண்மைய காலங்களில் கைப்பற்றப்பட்ட அதிகளவான ஹெரோயின் தொகை இதுவென தெரிவிக்கப்படுகிறது.