அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது: ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 November 1, 2024

திர்வரும் நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

25க்கும் குறைவான அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை நொவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் அமைக்கப்படும் என – ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

“அதுமட்டுமின்றி, அமைச்சர்களை அரசு ஊழியர்களாக மாற்றும் நோக்கில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் பெருமளவில் குறைக்கப்படும்.

ஒவ்வொரு விடயத்திலும் அனுபவமும் புரிதலும் உள்ள குழுவை அமைச்சரவை நிச்சயமாகக் கொண்டிருக்கும்.

அதன் பின்னர், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த அமைச்சுக்களுக்கு தாமாக முன்வந்து தமது பங்களிப்பை வழங்கக்கூடிய பொறிமுறையை உருவாக்குவோம்.

நொவம்பர் 14ஆம் திகதிக்குப் பிறகு, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு இணைப்பாக அமையும் வகையிலான அமைச்சரவையும் அரசாங்கமும் அமைக்கப்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்