
மாகாண சபைத் தேர்தலுடன்சம்பந்தப்பட்ட சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக தேர்தல்ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அண்மையில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றியபோது, அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க; ”இது தொடர்பான சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் தேர்தலை – தேர்தல் ஆணைக்குழு நடத்தும்” என்றார்.
“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் அல்லது முந்தைய விகிதாசார முறையின் கீழ் நடத்துவதற்கு – உரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். அது முடிந்ததும் தேர்தலை நடத்துவோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.
வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி, அமைச்சரவை, நாடாளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய வலுவான அரசியல் பொறிமுறையை ஸ்தாபிப்பது முக்கியம் என, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



