
– பாறுக் ஷிஹான் –
கல்முனையை துண்டாட நினைத்து தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்ற எந்தவொரு அரசியல் சக்திக்கும் – எமது கட்சி தலைமையும் எமது கட்சி உறுப்பினர்களும் இடமளிக்க மாட்டார்கள் என அம்பாறை மாவட்ட பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பாக வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளருமான அருள்ஞானமூர்த்தி நிதான்சன் தெரிவித்தார்.
கல்முனையில் அமைந்துள்ள அலுவலகத்தில் நேறறு (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
“இந்த தேர்தல் காலங்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முன் வைத்து அரசியல் செய்பவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நோக்கம் எனக்கு இருக்கின்றது. வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கின்றது. இதனை எந்தவொரு சக்தியினாலும் முறியடிக்க முடியாது. ஆனால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் என்பவரது கூட்டம் ஒன்றில் தமிழ் மக்களுக்கு எதிரான தீவிரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த கருத்துக்கள் யாவும் ஆக்ரோஷமானதாகவும் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே இனவாதத்தை தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.
அவர் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகவும் வடக்கு பிரதேச செயலகத்தை பயங்கரவாதிகள் கொண்டு வந்த பிரதேச செயலகமாகவும் கூறி சந்தர்ப்பவாத அரசியலையும் அவரது அனுதாப அரசியலையும் மிக கேவலமாக செய்தார்.
ஹரீஸ் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் இருக்கின்றார். ஆனாலும் அந்தக் கட்சியில் இருந்து விலகியுள்ளமை போன்று – நாடகம் ஒன்றினை ஆடுகின்றார். கடந்த காலங்களில் தனது தலையை ரணிலுக்கு காட்டிவிட்டு வாலை சஜீத்திற்கு காட்டினார். தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு ஹரீஸின் ஆதரவாளர்கள் வேலை செய்கின்றனர்.
கல்முனை பகுதியில் உள்ள ஒரு பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் என்பவரது பெயரை சூட்டுவதற்காக முயற்சி எடுத்த தரப்புக்கள், தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றது. ஏ.ஆர்.எம் மன்சூர் என்பவரது மகன் ரஹ்மத் மன்சூர் இன்று தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். அவர் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்தவர்.
ஹரீஸ் என்பவர் தேர்தல் களத்தில் இல்லாவிட்டாலும் ரஹ்மத் மன்சூர் நிறுத்தப்பட்டுள்ளார். ரஹ்மத் மன்சூர் – கல்முனைக்கு எம்.பியாக வந்தால் எவ்வாறான ஆபத்துக்கள் எமக்கு வரும் என்பது நன்கு தெரியும். கல்முனையை துண்டாட நினைத்து தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்ற எந்தவொரு அரசியல் சக்திக்கும் – எமது கட்சி தலைமையும் எமது கட்சி உறுப்பினர்களும் இடமளிக்க மாட்டார்கள்.
கரையோர மாவட்டம் என்பது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் யாப்பு கொள்கையாக இருப்பினும், கல்முனை தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படும் வகையில் கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ் கிராமங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற வகையில் கரையோர மாவட்டம் பிரிப்பதற்கு எந்தவொரு இடத்திலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனை முன்னிறுத்தி கல்முனை பகுதியில் தேர்தலில் இறங்கி இருக்கின்ற வேட்பாளர்களுக்கு எதிராக நான் களத்தில் எப்போதும் இருந்து எதிர்ப்பேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.



