தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தொச ஊழியர்களை 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை – தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியமைக்காக, அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஜோன்ஸ்டன் பெனாண்டோ கூட்டுறவு – உள்நாட்டு வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது, ​​லங்கா சதொச ஊழியர்கள் 153 பேரை, அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியதாகவும், இதன் மூலம் 40 மில்லியன் ரூபாயை அரசுக்கு நட்டமேற்படுத்தியதாகவும் முன்னாள் அமைச்சர் உட்பட மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகர்த்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​ஜோன்ஸ்டன் பெனாண்டோ நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொழும்பிலுள்ள ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த அவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் பதிவு செய்யப்படாத சொகுசு கார் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, ஜோன்ஸ்டன் பெனாண்டோ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) ஆஜராகியுள்ளதாக, அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கு மீண்டும் ஜனவரி 27, 2025 அன்று விசாரணைக்கு வர உள்ளது.