தலைப்புச் செய்திகள்

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்களை தோற்கடிக்கும் நடவடிக்கை, நிந்தவூரிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்: மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் தாஹிர்

– அஹமட் –

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்களை, இந்தத் தேர்தலில் எவ்வித கருணையும் இன்றி தோற்கடிக்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் – அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் வேண்டுகோள் விடுத்தார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டி நிந்தவூரில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் நேற்று (22) கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

20ஆவது திருத்தத்துக்கு வாக்களித்தவர்களை தோற்கடிக்கும் நடவடிக்கையை நிந்தவூரில் இருந்தே ஆரம்பிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

கொரோனா காரணமாக மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு உத்தரவு பிறப்பித்த கோட்டாபய ராஜபக்ஷவுடன் கூடிக் குலாவி மகிழ்ந்திருந்த அப்போதைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோட்டாவின் அதிகாரங்களைப் பலப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றில் ஆதரவாக வாக்களித்தமை மிகப் பெரும் பாவமாகும் என்றும் அவர் கூறினார்.

“எமது ஜனாஸாக்களை எரித்த கோட்டாவோடு – அப்போது நட்பாக இருந்து விட்டு, இப்போது மக்களிடம் வந்து, ஜனாஸாக்களை எரிப்பதை கோட்டாவிடம் சொல்லி நிறுத்துவற்காகவே, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தோம் என கூறுவது, அயோக்கியத்தனமாகும்” எனத் தெரிவித்த தாஹிர்; “இப்படியெல்லாம் பேசி – மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது” என்றார்.

மேலும் அவர் அங்கு கூறுகையில்; “தற்போது வேறு கட்சிகள் சார்பாக தேர்தலில் போட்டியிடும் சிலருக்கு, வேட்புமனுவில் இடங்கொடுக்க வேண்டாம் என மக்கள் கூறினார்கள். ஆனால், அதையும் தாண்டி – அழுது, மண்டியிட்டே அவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை – அவர்களின் கட்சித் தலைமையிடம் பெற்றுள்ளனர். அவ்வாறானவர்களுக்கு இந்தத் தேர்தலில் சிறந்த பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும்” என, வேட்பாளர் தாஹிர் வலியுறுத்தினார்.

அதேவேளை, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த எவருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுவதற்கு தமது கட்சித் தலைமை சந்தர்ப்பம் வழங்கவில்லை எனவும் தாஹிர் மேலும் தெரவித்தார்.