
பொத்துவில் – அறுகம்பே பகுதிக்குச் சுற்றுலா செல்வதை, மறு அறிவித்தல் வரை தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
அறுகம்பே பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என, நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளமையினால், முன்னெச்சரிக்கையாக இந்த பயணக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், ஏதேனும் சந்தேகமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்தை அழைக்குமாறு தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.
இருந்த போதிலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, மத்திய கிழக்கு உட்பட கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள யுத்தத்தைக் கருத்திற்கொண்டு, இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பன அறிவுறுத்தியுள்ளன.
இதன்படி, எந்தவொரு சுற்றுலாப் பயணியும் பாதுகாப்பு தொடர்பில் 1997 என்ற இலக்கத்துக்குத் தகவல் வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப்பிரி தெரிவித்துள்ளது.



