
– பாறுக் ஷிஹான் –
கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணுக்குள் இருந்து கைக்குண்டொன்று மீட்டப்பட்ட நிலையில், அதனை செயலிழக்கச் செய்வதற்கு விசேட அதிரடிப் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் நேற்று (21) மாலை, கட்டட வேலைக்காக கொட்டப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில், கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது.
இதனையடுத்து கட்டட வேலையில் ஈடுபட்டவர்கள் 119 எனும் பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார், அங்கு வந்து – குண்டு செயலிழக்கும் விசேட அதிரடி படையினர் மற்றும் குற்றத் தடயவியல் பொலிஸாரை வரவழைத்தனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டை அவ்விடத்தில் இருந்து அகற்றி செயலிழக்கச் செய்வதற்காக, இன்று (22) சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற கட்டளையை பெற்று, மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வந்தனர்.




