தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனையில் முன்னாள் எம்.பி நசீரை தோற்கடிக்கும் சதியை கட்சிக்குள் இருந்து கொண்டே, உதுமாலெப்பை செய்தார்: சக வேட்பாளர் மருதமுனை அமீர் குற்றச்சாட்டு

– புதிது செய்தியாளர் –

முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீசுக்கு தற்போதைய பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை தடுத்தமையின் மூலம், முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை வேட்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, கல்முனை மண்ணுக்குத் துரோகம் செய்துள்ளார் என, அதே கட்சியின் சக வேட்பாளர் மருதமுனையைச் சேர்ந்த ஏ.ஆர். அமீர் தெரிவித்துள்ளார்.

மருதமுனையில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார்.

“அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரை, கடந்த பொதுத் தேர்தலில் தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை, கட்சிக்குள் இருந்து கொண்டே உதுமாலெப்பை செய்தார் என்கிற பழி அந்த ஊரில் இன்னும் உள்ளது” எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.

”முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல். தவம் – வருடக் கணக்கில் அவருடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீசை விமர்சித்து வந்தார். அவர் நயவஞ்சமாக ஹரீசுக்குச் செய்த துரோகத்தின் காரணமாக கல்முனைக்கும் கல்முனை மக்களுக்கும் துரோகம் செய்துள்ளார்.

கல்முனைக்கான நேரடி அரசியல் அதிகாரத்தை இல்லாமல் செய்தன் ஊடாக, அவர்கள் தம்மை அரசியலில் அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்பது பகற்கனவாகும். அது ஒருபோதும் பலிக்காது” என, அமீர் மேலும் தெரிவித்தார்.

இம்முறை பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எச்.எம்.எம். ஹரீசுக்கு வேட்புமனுவில் இடம் வழங்கக் கூடாது என்று, முஸ்லிம் காங்கிரசின் ஏனைய வேட்பாளர்களான அக்கரைப்பற்று ஏ.எல். தவம், அட்டாளைச்சேனை எம்.எஸ். உதுமாலெப்பை, சாய்ந்தமரு சிராஸ் மீராசாஹிப் மற்றும் கல்முனை ரஹ்மத் மன்சூர் ஆகியோர் – கட்சிக்குள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீசுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சந்தர்ப்பத்தை மறுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் கல்முனையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதிகள் குறித்து பேசியிருந்தார். அந்தக் கூட்டத்தில் வேட்பாளர் அமீரும் கலந்து கொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பானது: முதுகில் குத்திய கட்டப்பா | மு.கா தலைவரின் சூழ்ச்சி | ஹரீஸ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்| Puthithu