
– புதிது செய்தியாளர் –
தேர்தலில் தோல்வியுற்றால் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்வீர்களா என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் – கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஊடாக, பொதுத் தேர்தலில் போட்டியிடுபவருமான ரஊப் ஹக்கீமிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என பதிலளிக்காமல் மழுப்பியுள்ளார்.
ஊடகவியலாளர் ரஞ்சன் அருண் பிரசாத் மற்றும் செஷான் சேனாதிபதி ஆகியோர், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை – சிங்கள மொழியில் பிரத்தியேகமாக பேட்டி கண்ட போது எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்க முடியாமல் அவர் திணறியுள்ளார்.
”ஐக்கிய மக்கள் கூட்டணியிலுள்ள சிறுபான்மைக் கட்சித் தலைவர்கள், தாங்கள் தேர்தலில் தோல்வியுற்றால், தாம் நாடாளுமன்றம் செல்வதற்காகவே தேசியப்பட்டியலை பயன்படுத்தவுள்ளதாக நாம் கேள்விப்படுகின்றோம். இதற்கு உங்கள் பதில் என்ன?” என்று – ரஊப் ஹக்கீமிடம் ஊடகவியலாளர் அருண் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த ஹக்கீம்; “எமது கட்சியின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரை தேசியப்பட்டியலின் ஐந்தாவது இடத்தில் இட்டுள்ளோம். நாங்கள் வலுவான அரசியல்வாதிகள், எங்களுக்கு சுய பலம் உள்ளது. எங்களைப் பற்றி நல்ல நிலைப்பாடு உள்ளது. அதில் எங்களுக்கு பிரச்சினையும் இல்லை” என்றார்.
”நான் கேட்பது, நீங்கள் தோல்வியுற்றால், தேசியப்பட்டியலை நீங்கள் பயன்படுத்துவீர்களா?” என, ஊடகவியலாளர் அருண் – மீண்டும் கேட்ட போது;
“நான் தோற்பதற்கு வாக்கு கேட்கவில்லை. கடந்த காலங்களில் கண்டி மாவட்டத் தேர்தலில் நான் முதலாவதாக வந்தேன். கண்டி மாவட்டத்தில் நான் ஆறாவது தடவையாக போட்டியிடுகிறேன். நான் எப்போதும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்துக்குள் வந்துள்ளேன். எந்தச் சவாலையும் நாம் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்” என ஹக்கீம் பதிலளித்தார்.
”சரி, பொதுவாக நான் கேட்கிறேன். தேர்தலில் தோற்றுப் போன ஒருவருக்கு தேசியப்பட்டியலில் இடம் கொடுப்பது சரியா? தவறா?” என, ஊடகவியலாளர் அருண் தொடர்ந்து – ரஊப் ஹக்கீமிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ரஊப் ஹக்கீம்; ”ஒவ்வொரு கட்சியும் சந்தர்ப்பத்துக்கேற்ப எந்த முடிவையும் எடுக்கலாம். தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு நாங்கள் தேசியப்பட்டில் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கியுள்ளோம். தோற்றவருக்கு தேசியப்பட்டியல் வழங்குவதா என்கிற முடிவை கட்சிதான் எடுக்கிறது. நாங்கள் தனியாக முடிவெடுப்பதில்லை.
இந்த நாட்டில் மூன்று மாவட்டங்களில் போட்டியிட்டு நான் முதலாவதாக வந்துள்ளேன். நாங்கள் சவால்களைக் கண்டு ஓடுவதில்லை, சவால்களை எதிர்கொள்கிறோம். இறைவனின் உதவியால் இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவேன் என நம்புகிறேன்” என்றார்.



