தலைப்புச் செய்திகள்

பெரிய நீலாவணையில் சவப்பெட்டி தூக்கி ஆர்ப்பாட்டம்

– பாறுக் ஷிஹான் –

பெரியநீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபான விற்பனை நிலையம் உள்ள நிலையில், மீண்டும் புதிதாக ஒரு மதுபான விற்பனை நியைம் திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சவப் பெட்டி தூக்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று (09) ஈடுபட்டனர்.

குறித்த மதுபான விற்பனை நிலையம் பாடசாலைமாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாகவும், பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் இதனைக் கவனத்தில் கொள்ளுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஏற்கனவே ஒரு மதுபானசாலை நீண்ட நாட்களாக உள்ள நிலையில், புதிதாக ஒரு மதுபானசாலை இங்கு அவசியம் இல்லை எனவும், சிறிய இக் கிராமத்திற்கு இரு மதுபானசாலைகள் தேவையில்லை எனவும் – இது தங்கள் சமூகத்தை சீரழிப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரித்தான உன்னிச்சை என்ற விலாசம் கொண்ட லேபல் பொறிக்கப்பட்ட மதுபானசாலையே, அம்பாறை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் குறித்த இடத்துக்கு வருகை தந்த நிலையில், குறித்த மதுபான சாலையை தற்காலிகமாக மூடுமாறு உரிமையாளரிடம் கேட்டுக் கொண்டதோடு, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறும் வேண்டிக் கொண்டார்.

மேலும், குறித்த மதுபான சாலையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மதுவரி திணைக்களத்துடன் கலந்துரையாடி மேற்கொள்வதாகவும் உறுதி அளித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.