இலங்கை வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்: ஜனாதிபதி, ரணில், சஜித் ஆகியோருடன் பேச்சு

🕔 October 4, 2024

லங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று (04) ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். இதன் போது இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் தற்போதைய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இன்று கொழும்பில் ஜனாதிபதி திஸாநாயக்கவை சந்திப்பது ஒரு கௌரவம் என்று கலாநிதி ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது – இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் வாழ்த்துக்களையும் ஜனாதிபதி அனுரவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

“இந்திய – இலங்கை உறவுகளுக்கான அவரின் அன்பான உணர்வுகளையும் வழிகாட்டுதலையும் பாராட்டுகிறேன். இரு நாடுகள் மற்றும் பிராந்திய மக்களின் நலனுக்காக, தற்போதைய ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்றைய கலந்துரையாடலின் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு இந்திய வெளிவிவகார அமைச்சரின் முதல் விஜயமாக இது அமைந்துள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இந்தியாவின் தொடர்ச்சியான முழுமையான ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

கலாநிதி ஜெய்சங்கரின் இலங்கைப் பயணத்தின் போது அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் அடிக்கடி கூறுவது போல், ‘பலமான மற்றும் செழிப்பான சுற்றுப்புறம் என்பது அனைவரின் நலனிலும் உள்ளது’. பிராந்திய வளர்ச்சிக்கான நமது பரஸ்பர நலன்களை ஆதரிக்கும் அதே வேளையில், இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு இந்தியாவின் முழுமையான ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனத் தெரிித்துள்ளார்.

மறுபுறமாக, இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது, ​​தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடன் ஏற்படுத்தப்பட்ட வலுவான உறவை புதிய அரசாங்கம் தொடர்ந்தும் பேணும் என – தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்