தலைப்புச் செய்திகள்

வெளிநாட்டு வேலைக்குச் செல்வோரின் தொகை அதிகரிப்பு

வெளிநாட்டு வேலைகளுக்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இந்த அதிகரிப்பு தெரியவந்துள்ளது.

2024 செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 28,344 நபர்கள் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளமையினால், இலங்கையர்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 10% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் 09 மாதங்களுக்குள் 240,000 க்கும் அதிகமான இலங்கையர்கள் – வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறியுள்ளனர். இதில் 99,939 பெண்களும் 142,170 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

2024 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டு வேலைக்காகப் புறப்பட்ட மொத்த திறமையான தொழிலாளர்களின் எண்ணிக்கை 70,396 ஆகும். 3,704 பேர் அரை திறன் கொண்ட வேலைகளுக்குச் சென்றுள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் இதுவரை அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் சஊதி அரேபியாவுக்கு வேலை வாய்ப்பு பெற்று சென்றுள்ளனர்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் 09 மாதங்களில் 6,391 இலங்கையர்கள் இஸ்ரேலில் வேலைக்காகச் சென்றுள்ளனர். அதேவேளையில் 6,295 நபர்கள் ஜப்பானுக்கும் 5,870 பேர் தென் கொரியாவிற்கும் சென்றுள்ளனர்.