
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான கைதிகளுக்கு பொருத்தமான முறைமையை சிறைச்சாலைத் திணைக்களம் மேற்கொள்வதற்கு எவ்வித ஆட்சேபனைகளம் கிடையாது என – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் நீதிமன்ற உத்தரவு அல்லது தேர்தல் ஆணைக்குழு போன்ற தொடர்புடைய நிறுவனங்களின் உத்தரவுகளின் அடிப்படையில் – வேலைத்திட்டம் தயாரிக்கப்படாவிட்டால், எந்தவொரு கைதியும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க முடியாது எனவும் தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது.
இது குறித்து ஊடகமொன்றிடம் பேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க – ”கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கும் முயற்சியில் மேம்பட்ட வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்தவும், சிறைச்சாலை வளாகங்களில் வாக்களிப்பு நிலையங்களை நிறுவவும் தேர்தல் ஆணைக்குழு முன்மொழிந்தது. ஆனால் அந்த முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை” என்றார்.
“சம்பந்தப்பட்ட சட்டங்கள் திருத்தப்படும் வரை – இந்தப் பிரச்சினையில் எங்களால் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் முடிந்த அனைத்தையும் செய்தோம், ஆனால் அது தொடர்பான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் திருத்தப்படவில்லை” என்றும் கூறியுள்ளார்.
கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு என்று குறிப்பிட்ட அவர், அவர்கள் (கைதிகள்) வாக்களிப்பதற்கான வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்பதே ஒரே பிரச்சினை என்றார்.
“மேம்பட்ட வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்த அல்லது சிறைச்சாலைகளில் வாக்களிப்பு மையங்களை நிறுவ நாங்கள் முன்மொழிந்தோம், ஆனால் அவை செயல்படுத்தப்படவில்லை. இருந்தபோதிலும், சிறைக்கைதிகள் வாக்களிக்க சில பொறிமுறைகளை சிறைச்சாலைகள் திணைக்களம் வகுத்தால், அதற்கு எமக்கு ஆட்சேபனை இல்லை.
கைதிகளை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் சென்று வாக்களிக்க சிறைச்சாலை திணைக்களம் அனுமதித்தால், அது முற்றிலும் நல்லது. ஆனால், தங்களால் அதைச் செய்ய முடியாது என்று, சிறைச்சாலைத் திணைக்களம் கூறுகிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து ஊடகம் ஒன்றிடம் பேசிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய;பல தரப்பினர் இந்த விடயத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றதாகவும், ஆனால் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
சிறைக்கைதிகளுக்கு வாக்களிக்கும் வசதிக்கான எந்த திட்டத்தையும் திணைக்களம் தயாரிக்கவில்லை என்றும், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கினால் அல்லது தேர்தல் ஆணைக்குழு போன்ற – தொடர்புடைய நிறுவனங்கள் உத்தரவுகளை பிறப்பித்தால் அவ்வாறு செய்வது குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கைதிகள் வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில், இந்த விடயம் இன்னும் கலந்துரையாடலில் உள்ளதாகவும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு கைதியும் வாக்களிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



