தலைப்புச் செய்திகள்

யாரை ஆதரிப்பது: அம்பாறை மாவட்ட மக்களைச் சந்தித்தார் ம.கா தலைவர் றிஷாட் பதியுதீன்

– பாறுக் ஷிஹான் –

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில், மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நிகழ்வு ஒன்றினை, கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னிலையில் – அட்டாளைச்சேனையில் நேற்று (12) இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடத்தியது.

கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் அமீர் மற்றும் அட்டாளைச் சேனை மத்திய குழுத் தலைவர் ஹம்ஷா சனூஸ்ஆகியோரின் ஒருங்கிணைப்பில், நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.எம். ஜவாத் தலைமை தாங்கினார்.

இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான அமீர் அலி ஆகியோரும் கலந்து கொண்டு – மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

இதன்போது, கட்சியின் பிரதி செயலாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ. அன்சில், கட்சியின் பிரதி அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். தாஹிர் மற்றும் கட்சியின் வெளிநாட்டு விவகார பணிப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஐ.எல்.எம். மாஹிர் ஆகியோரும் உரையாற்றினர்.

இங்கு கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பொத்துவில், அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, இறக்காமம், வாங்காமம், வரிப்பத்தான்சேனை, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி மற்றும் மத்தியமுகாம் ஆகிய பிரதேசங்களின் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.