
‘சொக்கா மல்லி’ பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த பிரேமலால் ஜயசேகர, தற்போது நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று (13) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; தனது கட்சி தனது சொந்த வேட்பாளரை நிறுத்துவதால், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்ததாக குறிப்பிட்டார்.
“ஜனாதிபதியுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. பொதுஜன பெரமுன என்னை அழைததது. எனது கட்சிக்கு துரோகம் செய்யும் முடிவை எடுக்க முடியாது. எனது தொகுதி மக்களும் என்னை கட்சியில் நீடிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். கட்சி மாறும் எண்ணம் எனக்கு இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த வாரம் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர – தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
கொலைக் குற்றச்சாட்டு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டு – சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், 2020ஆம் ஆண்டு பிரேமலால் ஜயசேகர – நாடாளுமன்ற உறுப்பினரானார்.
பின்னர் அந்தத் தண்டனைக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்தமையினை அடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.



