
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரின் இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.
செவ்வாய்க்கிழமை ஈரானின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியே கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
62 வயதான ஹனியே 1980களின் பிற்பகுதியில் இருந்து – ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்.
இதேவேளை, இஸ்ரேலிடம் இருந்து உத்தியோகபூர்வமாக எந்த அறிக்கையும் இன்னும் வெளியாகவில்லை.
ஆனால் இஸ்ரேலின் தீவிர வலதுசாரியான கலாசார அமைச்சர் அமிச்சாய் எலியாஹு போன்ற சில அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்வினை வந்துள்ளது.
ஹனியேவின் மரணம் ‘உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுகிறது’ என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையிலல், ஹனியேவின் படுகொலைக்கு தங்கள் குழு பதிலடி கொடுக்கும் என்று ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
”இந்த கோழைத்தனமான செயலுக்கு, நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என குறிப்பிட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் அல் -அக்ஸா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.



