தலைப்புச் செய்திகள்

“தவறான முடிவு; மஹிந்த திருத்திக் கொள்ள வேண்டும்”

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மை கருத்துக்கு மாறாக – தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒருசில மக்களின் தேவைக்காக எடுக்கப்பட்ட தவறான தீர்மானத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருத்திக் கொள்வார் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுன – தனி வேட்பாளரை நிறுத்தும் தீர்மானம் – தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

”பொதுஜன பெரமுன மஹிந்த ராஜபக்ஷவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கட்சியை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் பங்களித்தோம். ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்ற தீர்மானத்தை எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட கட்சியல்ல பொதுஜன பெரமுன. எடுக்கப்பட்ட தவறான முடிவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சரிசெய்வார் என நான் நம்புகிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன அந்தக் கட்சி சார்பில் வேர்பாளரை நிறுத்துவதென, நேற்றைய தினம் அந்தக் கட்சி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.