
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த, தமது கட்சியின்அரசியல் குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியான நபர்களை கட்சி மேலும் ஆராயும் என்றும், வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளவர் எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கட்சியின் அனுமதியின்றி 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் SLPP உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
வேட்பாளரைத் தெரிவிப்பதில் தாமதம் ஏற்படவில்லையா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சாகல காரியவசம், “வெற்றி பெறும் நேரத்தில் வெற்றிபெறும் வேட்பாளரை அறிவிப்போம்” என்றார்.
“மொட்டு சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று செயற்குழுவில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஒரு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பெரும்பான்மையானோர் அந்த முடிவுக்கு ஆதரவாக இருந்தனர். எனவே, தனி வேட்பாளரை நிறுத்தும் தீர்மானம் – பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது” என்றார்.
எது எவ்வாறிருந்த போதிலும் பொதுஜன பெரமுனவின் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



