தலைப்புச் செய்திகள்

கோட்டா ‘கேட்காத’ மன்னிப்பும், ரணில் ‘கேட்கும்’ மன்னிப்பும்: முஸ்லிம்களின் உணர்வுகளில் மூட்டப்படும் ‘தீ’

– மப்றூக் –

லகில் மிகவும் மகத்தானது மன்னிப்பு. தாம் செய்த தவறை அல்லது பிழையை உணர்ந்து – அதனால் பாதிக்கப்பட்டோரிடம் கேட்கும் மன்னிப்பு ‘அர்த்தங்கள்’ நிறைந்ததாகும் . ஆனால் மன்னிப்பை சிலர் ‘தந்திர மனதோடு’ பயன்படுத்துவதுமுண்டு. அவ்வாறான மன்னிப்பு வெறும் ‘வார்த்தையாக’ மட்டுமே இருக்கும். அவை உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் இருப்பதில்லை.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்ட சமூகங்களிடம் ‘மன்னிப்பு’க் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது முஸ்லிம்களைப் பழிதீர்ப்பதற்காகவே – கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக எரிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.

தனக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்கிற கோபம் – கோட்டாவின் மனதில் தீயாக இருந்தது. அதனால், சர்ந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் முஸ்லிம் அரசியல் தலைவர்களையும், முஸ்லிம் சமூகத்தையும் அவர் பழி தீர்த்துக் கொண்டேயிருந்தார்.

கொரோனா காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களில் 276 பேரின் உடல்கள் பலாத்காரமாக எரிக்கப்பட்டன.

இவ்வாறு உடல்களை வலுக்கட்டாயமாக எரிக்கும் கோட்டாவின் நடவடிக்கைக்கு, அவர் நியமித்த ‘நிபுணர்கள் குழு’வொன்று ‘பக்க வாத்தியம்’ அடித்தது. கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தால், அந்த உடல்களில் இருக்கும் வைரஸ் – நிலக்கீழ் நீரில் கலக்கும் என்றும், அதனால் மக்கள் அருந்தும் நீர் பாதிக்கப்படும் எனவும், கோட்டா நியமித்த ‘நிபுணர் குழு’ பொய் சொல்லியது. ‘கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதால் நிலக்கீழ் நீர் பாதிக்கப்படாது’ என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறிய போதும், கோட்டாவின் நிபுணர் குழு – மடத்தனமாக பேசிக் கொண்டிருந்தது.

கொரோனா காலத்தில் தமக்கும் அந்தத் தொற்று ஏற்பட்டு, அதனால் தாங்கள் இறந்து விடுவோமோ என – இலங்கையில் முஸ்லிம்கள் அச்சப்பட்டமைய விடவும், அவ்வாறு மரணித்தால், தங்கள் உடல்கள் பலாத்காரமாக எரிக்கப்பட்டு விடும் என்பதை எண்ணித்தான் அவர்கள் அதிகம் கலவரமடைந்தனர்.

இந்தப் பின்னணியில், கட்டாய உடல் தகனம் காரணமாக பாதிக்கப்பட்ட சமூகங்களிடம், அரசாங்கம் மன்னிப்புக் கோருவதற்கு – அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

அரசாங்கம் இவ்விடயத்தில் மன்னிப்புக் கோருவதன் மூலம், பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு எந்தவித நன்மைகளோ அல்லது இழப்பீடுகளோ கிடைத்து விடப் போவதில்லை.

தகனம் செய்யப்பட்ட உடல்களின் சொந்தக்காரர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கினாலும், அதனை அவர்கள் பெறுவார்களாக என்கிற கேள்வியும் உள்ளது. காரணம், இது உணர்வுபூர்வமான விடயமாகும். ”எனது தாய், எனது தந்தை, எனது பிள்ளையின் உடலை வலுக்கட்டாயமாக எரித்துவிட்டு, அதற்காக வழங்கும் இழப்பீட்டைப் பெற்று – அதனை நான் அனுபவிப்பதா?” என்கிற கேள்வி எல்லோருக்குள்ளும் எழும்.

எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் கேட்கும் மன்னிப்பை அர்த்தமானதாக ஆக்கிக் கொள்வதாயின், ‘கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்களை பலாத்காரமாக எரித்தமை பிழை’ என்பதை முதலில் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்து – அந்தப் பிழையைச் செய்வதற்கு ஆலோசனை வழங்கிய நிபுணர்கள் குழுவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும். கடந்த வருடம் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த போது, “நிபுணர் குழுவில் நியமிக்கப்பட்ட மெத்திகா விதா­னகே , உடல்களை அடக்கம் செய்வதற்கு எதி­ராக இருந்தார்” என்றும், ”அதற்கு இணங்கவில்லை என்றால், ­தான் தொழிலை விட்டு வெளி­யே­றப்போவதாக அச்­சு­றுத்­தினார்” எனவும் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

அதேபோன்று அந்த நிபுணர் குழுவின் பின்னாலும் முன்னாலும் இருந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

இவற்றினையெல்லாம் ஒதுக்கி விட்டு, ‘மன்னிப்பு’ என்பதை மிகவும் தந்திரமான மனநிலையோடும், அதற்குரிய பெறுமானங்களை இழந்த ஒரு சொல்லாகவும் பயன்படுத்துவதை, பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பும் ஏற்றுக் கொள்ளாது.

மிகச் சரியாகச் சொல்வதென்றால், தனக்கு வாக்களிக்காத முஸ்லிம் மக்களைப் பழி தீர்ப்பதற்காக – கட்டாய தகனத்தை கோட்டா கையில் எடுத்ததைப் போலவே, தனக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக – ‘கட்டாய தகனத்தை’ இப்போது ரணில் கையில் எடுத்திருக்கிறார்.

அப்படிப் பார்த்தால், கோட்டா கேட்காத மன்னிப்பும், ரணில் கேட்கும் மன்னிப்பும் ஒன்றேதான்.