
தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை இதுவரை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மாத இறுதிக்குள் அதனைச் சமர்ப்பிக்குமாறு லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இறுதி அறிவித்தலை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளதுடன், இதுவரையில் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதேவேளை அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் அத்தகைய பிரகடனங்களை ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய பிரகடனத்தைச் சமர்ப்பிக்காதவர்களின் சம்பளத்தில் – மூன்றில் ஒரு பங்கிற்கு கூடுதலான தொகையை அபராதமாக விதிப்பதற்கு – லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.



