
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக – இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கட்சியின் செயற்குழு இந்த வாரம் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“ஒருவர் கட்சியில் எந்த பதவியில் இருந்தாலும் கட்சியின் கொள்கைகளின்படி செயல்பட வேண்டும். பொன்சேகா ஒழுக்கமான முறையில் செயற்படுவதாக தெரியவில்லை. கட்சியில் இருக்கும் வரை கட்சித் தலைவருடன் இணைந்து பணியாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம். அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த வாரம் செயற்குழு முடிவு செய்யும்” எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மைக்காலமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை புகழ்ந்து பேசி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குறித்து ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் கேட்கப்பட்டபோது, ”அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் எதுவும் இல்லை. சரத் பொன்சேகாவை போன்று ராஜித சேனாரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரை கடுமையாக விமர்சிக்கவில்லை” எனத் தெரவித்தார்.
அண்மைக்காலமாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை, மிகவும் கடுமையாக சரத் பொன்சேகா விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



