தலைப்புச் செய்திகள்

பாடசாலை ஆசிரியைக்கும், பெண் ஒருவருக்கும் ஏற்பட்ட ஒருபாலினக் காதல்; வீட்டை விட்டு ஓடிய நிலையில், பொலிஸாரிடம் சிக்கினர்: பிள்ளைகளுடன் கணவர்கள் வந்த போது பரபரப்பு

ண்டியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இரண்டு பெண்களின் கணவர்கள், அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதால் கண்டி பொலிஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வத்தளையைச் சேர்ந்த 34 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் தனது பிள்ளையை கந்தானையிலுள்ள பாடசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர் 29 வயதுடைய பெண் ஆசிரியை ஒருவருடன் ரகசிய உறவை ஏற்படுத்தியதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி பெண்கள் இருவரும் – ஒரு மாதத்துக்கு முன்பு தங்கள் வீடுகளில் இருந்து காணாமல் போனார்கள்.

அவர்களின் கணவர்கள் – அவர்கள் காணாமல் போனதாக கந்தானை மற்றும் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்து, இரு பெண்களின் புகைப்படங்களையும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கினர்.

இதேவேளை, கண்டியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் – காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட பெண்கள் இருவரை அவதானித்துள்ளார். இதனையடுத்து, கண்டி பொலிஸார் அவர்களைக் காவலில் எடுத்து விசாரித்ததில், அவர்கள் கண்டி சுதுஹும்பொல பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் தங்கியிருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அவர்களின் கணவர்கள் கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். அதன்படி பெண்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவர்களின் பிள்ளைகளுடன் கணவர்கள் வந்தனர். ஆனால் குறித்த பெண்கள் இருவரும் கணவர்களுடன் செல்வதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். தங்களை பிரிக்க வேண்டாம் என்று பொலிஸாரிடமும் அவர்களது கணவர்களிடமும் அழுதனர்.

இதன்போது வீடு திரும்பும்படி அவர்களின் குழந்தைகள் கேட்டுக் கொண்டபோதும், அதனையும் அந்தப் பெண்கள் நிராகரித்தனர். ஆயினும் அந்தப் பெண்களின் எதிர்ப்பையும் மீறி, ஒரு பெண்ணை அவரின் கணவர் வலுக்கட்டாயமாக வேனில் அழைத்துச் சென்றார். மற்றொருவர், அழுது புலம்பியபடி – தயக்கத்துடன் தனது கணவர் மற்றும் குழந்தைகளைப் பின்தொடர்ந்து சென்றார்.

இரண்டு பெண்களும் – அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் இணைவதற்கு வசதியாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.