தலைப்புச் செய்திகள்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர், அரசியல் முதிர்ச்சி இல்லாதவர்

Hafis Naseer - 012
கி
ழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்  – அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாதவர் என்றும், அவர் நாகரீகமாகப் பேச வேண்டுமெனவும், கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இவேளை, பிரதேசவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘கல்வி ராஜாங்க அமைச்சர் மலையகத்தில் இருந்து வந்து, மாகாண அதிகாரங்களுக்கு சவால் விடுக்கின்றார்’ என்கிற கருத்துப்பட, கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் கருத்து வெளியிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

முதலமைச்சர் ஹாபீஸ் நசீரின் இந்தக் கருத்து தொடர்பில் ராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் ராதா கிருஷ்ணன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

“கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து முற்றிலும் பிழையானது. அரசியல் அனுபவம் மற்றும் அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒருவருடைய பேச்சாகவே இது உள்ளது.

மேடைப் பேச்சு நாகரீகமாக இருக்க வேண்டும். கருத்துக்கள் ஊடகங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினரையும் சென்றடைகின்ற காரணத்தால் இடம், பொருள், ஏவல் அறிந்து உரையாற்றுவது பொருத்தமானது.

தமிழ் தேசிய கூட்டமைப்புடனும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹகீம் மற்றும் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் ஆகியோருடன்  சுமூகமான உறவை கொண்டுள்ளேன்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு கருத்துக்களை வெளியிடுவதானது,  இரண்டு சமூகங்களுக்கும் இடையில் தேவையற்ற சங்கடங்களை உருவாக்கும்.

எனவே, மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், நாம் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிட வேண்டும்.

என்னை மலையகத்தில் இருந்து வந்தவர் என குறிப்பிட்டிருப்பதானது, பிரதேசவாதத்தை தூண்டும் ஒரு கூற்றாகவே நான் கருதுகிறேன்”.