மதுபான விலைகளை குறைக்குமாறும், இரவுப் பொருளாதாரத்தைக் கொண்டுவருமாறும் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே கோரிக்கை

🕔 August 22, 2023

விற்பனை மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (22) நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

“மதுபானங்களின் விலை குறைக்கப்பட்டால் அதிகமான மக்கள் மதுபானங்களை வாங்குவார்கள். அதிகமான மக்கள் மதுபானங்களை வாங்கும்போது வரி வருவாய் அதிகரிக்கும். இல்லை என்றால் இலங்கையில் மதுவை தடைசெய்து, கலால் திணைக்களத்தையும் மூட வேண்டியிருக்கும்” எனவும் அவர் கூறினார்.

இதேவேளை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இலங்கை இரவுப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 80 வீதமானவர்கள் எமது தீவுக்கு ஒரு தடவையே வருகை தருகின்றனர். “இலங்கையில் இரவு வாழ்க்கை இல்லாததால் ஒருமுறைதான் வருகிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் தூங்க சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதில்லை. இலங்கையில் இரவுப் பொருளாதாரம் தேவை என்று நான் கூறிதையடுத்து பலர் என்னை தாக்கிப் பேசினர். எந்த தொழிலையும் ஊக்குவிக்கும் எண்ணம் எனக்கு இல்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இசை நிகழ்ச்சிகள் காலை வரை தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த டயானா கமகே, “இரவு 11 மணிக்கு இசை நிகழ்ச்சிகளை ஏன் நிறுத்த வேண்டும்? கடற்கரை ஓரத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தினால் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்