‘வாடகை’ என்பதற்கு பதிலாக ‘குத்தகை’ என குறிப்பிடப்பட்டு விட்டது : ‘ஐ’ அலைவரிசை தொடர்பான வாக்குவாதத்தின் போது, அமைச்சர் பந்துல தெரிவிப்பு

🕔 August 22, 2023

ரசுக்குச் சொந்தமான ‘ஐ’ தொலைக்காட்சி அலைவரிசை குத்தகைக்கு விடப்படவில்லை என்றும், மாதாந்தம் 25 மில்லியன் ரூபா வாடகைக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றில் இன்று (22) தெரிவித்தார்.

‘ஐ’ தொலைக்காட்சி அலைவரிசையினை – லைகா மொபைல் குழுமத்துக்கு குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில், ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் நாடாளுமன்றில் இடம்பெற்ற கடும் வாக்குவாதத்தின் போது, அமைச்சர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியொன்றை எழுப்பிய அனுர குமார திஸாநாயக்க, உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் லைக்கா மொபைலின் எஸ்டிரி (SDT) அலைவரிசைக்கு அரசின் ‘ஐ’ தொலக்காட்சி அலைவரிசை குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் பந்துல குணவர்தன தனது மோசடிச் செயலை மூடிமறைப்பதற்காக – மறைமுக அனுமதியைப் பெற முயன்றதாகவும் கூறினார்.

எந்த அடிப்படையில், எந்த தொழில்நுட்பக் குழு மூலம் மாதத் தவணைக் கொடுப்பனவாக 25 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டது என இதன்போது கேள்வியெழுப்பிய அனுர குமார திஸாநாயக்க, ‘ஐ’ தொலைக்காட்சி அலைவரிசையின் பணிப்பாளர் சபைக்கு, முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் அவர்கள் விரும்பும் நிறுவனத்துக்கு தங்கள் ஒளிபரப்பு நேரத்தை குத்தகைக்கு விட அதிகாரம் உள்ளதா எனவும் வினவினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பந்துல, ‘ஐ’ அலைவரிசை குத்தகைக்கு விடப்படவில்லை என்றும், மாதாந்தம் 25 மில்லியன் ரூபா வாடகை அடிப்படையில், 06 மாதங்களுக்கு விஐஎஸ் (VIS) ஒளிபரப்பு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால், அமைச்சர் பந்துலை சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில், ‘ஐ’ அலைவரிசை 06 மாதங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று, அனுர குமார திஸாநாயக்க வாதிட்டார்.

அப்போது அமைச்சர் குணவர்தன, அமைச்சரவைப் பத்திரத்தை தயாரித்தது தான் அல்ல என்றும், அமைச்சரவைச் செயலாளர் ‘வாடகைக்கு’ என்பதற்குப் பதிலாக ‘குத்தகைக்கு’ என்ற வார்த்தையை தவறாகக் குறிப்பிட்டுள்ளார் என்றும் கூறினார்.

இதேவேளை, ‘ஐ’ அலைவரிசை கொடுக்கல் வாங்கலில் ஏதேனும் முறைகேட்டில் தான் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால், தனது அனைத்து பதவிகளில் இருந்தும், அரசியலில் இருந்தும் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அமைச்சர் பந்துல இதன்போது மேலும் கூறினார்.

தொடர்பான செய்தி: அரச தொலைக்காட்சி அலைவரிசை ‘சனல் ஐ’, அல்லிராஜா சுபாஸ்கரனின் ‘லைகா’வுக்கு குத்தகை அடிப்படையில் விற்பனை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்