முல்லைத்தீவு நீதவான் தொல்பொருள் கட்டளை சட்டத்தை மீறியுள்ளார் என, சரத் வீரசேகர எம்பி குற்றச்சாட்டு: நீதவானின் மனநலம் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டார்

🕔 August 22, 2023

குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு முல்லைத்தீவு நீதவான் அனுமதி அளித்ததன் மூலம், தொல்பொருள் கட்டளை சட்டத்தை அவர் மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார்.

தொல்பொருள் என்பது மரபுரிமையாகும். அது தேசிய அடையாளம். அதனை மாற்ற முயற்சிப்பது தேசத்துரோக செயலாக கருதப்படும்.

முல்லைதீவு நீதவான் குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கினார். இது வெள்ளவத்தை சிவன் கோவிலில் பிரித் பாராயணம் நடத்துவதற்கு கல்கிஸை நீதவான் அனுமதி வழங்குவதற்கு ஒப்பானதாகும்.

குறித்த நீதவான், மனநோயினால் பாதிக்கப்பட்டவர். இதனை அவரின் மனைவியே கூறியுள்ளார். அத்தகைய ஒருவர் எப்படி நீதிவானாக செயற்பட முடியும்.

எனவே, அவரை உடனடியாக நீக்கி, தகுதியுள்ள ஒரு தமிழ் நீதவானை அந்த இடத்துக்கு நியமிக்க வேண்டும்.

தொல்பொருள் கட்டளை சட்டத்தின் 31 (அ) பிரிவின் பிரகாரம், ஓர் இடம் பௌத்த மத சிதைவுகளை கொண்டிருப்பின், அந்த இடத்தில் பௌத்தர்களை ஆத்திரமூட்டும் வகையிலான செயல்களை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறானதொரு சட்டம் இருக்கையில் முல்லைதீவு நீதவான் தமது உத்தரவின் மூலம் குறித்த சட்டத்தை வெளிப்படையாகவே மீறியுள்ளார்.

எனவே, தொலைநோக்கின்றி வழங்கப்படும் உத்தரவுகள் – வீணான இனக்கலவரங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், வடக்கு மற்றும் கிழக்கில் தொல்பொருட்களை தேடுவதற்கு பதிலாக பௌத்த மயமாக்கல் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, “இல்லாத விடயங்களை கூறி, இவரை போன்றவர்களே இனவாதங்களை ஏற்படுத்த முயல்கின்றனர். 52 சதவீதமான தமிழர்கள் வசிக்கும் தென்னிலங்கையில் இவ்வாறான இனவாதங்கள் ஏற்படுவதில்லை” எனவும் தெரிவித்தார்.

Comments