கடல் நீரை சுத்திகரித்து, கல்பிட்டி மக்களுக்கு குடிநீர் வழங்கவுள்ளோம்: தேர்தல் பிரசார மேடையில் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 January 19, 2018
ல்பிட்டி தீபகற்பத்தில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ள நிலையில், அதனை பருகுவதால் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. குடிநீருக்கு மாற்று உபாயம் இல்லாத நிலையில், வெளிநாடுகளின் உதவியுடன் கடல்நீரை சுத்திகரித்து,கல்பிட்டி மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்குடா பிரதேச சபையில் மரச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று வெள்ளிக்கிழமை இரவு நுரைச்சோலையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்;

“கல்பிட்டியில் நிலத்தடி நீர் மாசடைந்து, பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளது. இந்த நீரில் நைதரசன் செறிவாக காணப்படுவதால், குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இங்கு கொண்டுவருகின்ற அளவுக்கு கலா ஓயாவிலும் நீர் இல்லை. இதனால், கடல்நீரை சுத்திகரித்து கல்பிட்டி பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான முயற்சியை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். ஜப்பானிய தூதுவரை நேரடியாக இங்கு அழைத்துவந்து, அதற்கான முற்சிகள் குறித்து ஆராய்ந்துள்ளோம்.

கடல்நீரை சுத்திகரிக்கின்றபோது அதிகளவான மின்விரயம் ஏற்படுகின்‌றது. இதற்கு ஈடுகொடுப்பதற்காக காற்றாடி மூலம் மின்சாரத்தை உற்பத்திசெய்து, அதன்மூலம் கடல்நீரை சுத்திகரிப்பதற்கான முயற்சி குறித்து, ஜேர்மனிய நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

கடல்நீரை சுத்திகரித்து வழங்குவதற்கான பாரிய முதலீட்டை யாழ்ப்பாணத்திலும், கல்பிட்டியிலும் செய்வதற்கு தயாராக உள்ளனர். இதன்பிரகாம், கற்பிட்டி கடற்படை முகாமை அண்டிய பகுதியில் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். இதற்கான நிதியுதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை நாங்கள் இப்போது செய்துகொண்டிருக்கிறோம்.

இதுதவிர, புத்தளம் தெற்கு நீர் வழங்கல் திட்டம் ஒன்றை நாங்கள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். இதன்மூலம், புத்தளத்தில் எஞ்சியுள்ள ஏனைய இடங்களுக்கு குடிநீர் வழங்கப்படும். இதேவேளை, கிராமங்களின் பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கு போதுமானளவு நிதியை, இந்த வருடம் எனது அமைச்சின் மூலம் ஒதுக்கித் தருவதற்கு தயாராகவுள்ளேன்.

மர்ஹூம் அஷ்ரஃப் காலத்தில் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு வழங்கப்பட்ட 02 மாடி கட்டிடம் தற்போது ஒரு மாடி மாத்திரமே கட்டப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது மாடியை கட்டித்தரும் பொறுப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறது. தூரத்திலிருந்து வருகின்ற ஆசிரியர்கள் தங்குவதற்கான விடுதியொன்றை அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதையும் நாங்கள் செய்துதருவோம்.

ஆலங்குடா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து தருமாறும் என்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிமை இங்கு அழைத்துவந்து அதற்கான உத்தரவாதத்தை பெற்றுத்தருவோம். அதேபோல, ஆலங்குடா விளையாட்டு மைதானத்தை செப்பனிட்டு அழகான மைதானமாக மாற்றித்தரும் பொறுப்பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறது.

எங்களது அபிவிருத்தி திட்டங்களை தங்குதடையின்றி நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை நாங்கள் கைப்பற்றவேண்டும். இந்த வெற்றி, அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கான அடித்தளமாக இருக்கவேண்டும்” என்றார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்