சமூக அரசியலில் திடமாக இருக்கிறோம் எனும் செய்தியை, தேர்தல் வாக்களிப்பில் முஸ்லிம்கள் வெளிப்படுத்த வேண்டும்: பசீர் சேகுதாவூத் கோரிக்கை

🕔 January 19, 2018

 

– அஹமட் –

திர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஆட்களையோ, கட்சிகளையோ பார்த்து வாக்களிக்கும் நடைமுறையை ‘மாற்றி’, கருத்துக்களை உள்வாங்கி அவற்றின் சரி பிழைகளைப் பிரித்தறிந்து வாக்களிக்கவேண்டும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாளர் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைத் தேசமும், சர்வதேசமும் முஸ்லிம் அரசியல் தலைவர்களை அன்றி, முஸ்லிம் மக்களைக் கணக்கில் எடுக்கும்படியாக வாக்களித்துக் காட்டவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் உள்ளுசாட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களை குறிப்பிட்டு,பசீர் சேகுதாவூத் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“உங்களில் கணிசமானோர் உள்ளுராட்சித் தேர்தலுக்காக, எதிர்வரும் 22 ஆம் திகதி தபால் வாக்களிப்பில் கலந்து கொள்வீர்கள். உங்களில் சிலர் எந்தக் கட்சிக்கு, எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கக் கூடும்.இன்னும் பலர் விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டிய நிலையில் இருப்பீர்கள். இந்த இரண்டு வகையான உத்தியோகத்தர்ளும் என்னுடைய இந்தக் கோரிக்கையை கருத்திலெடுக்குமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 2015 ஆம் ஆண்டைய ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இருந்து இன்றுவரை, ‘மாற்றம்’ வேண்டும் என்ற தொனிப்பொருளில், தேர்தல்களை எதிர்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

எதனில் மாற்றம் வேண்டும்?

பெரும்பாலோர் அரசாங்கத்தில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்தே ‘மாற்றம்’  என்ற சொல்லை உபயோகித்து வருகின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜனாதிபதியும் மாறினார், அரசாங்கமும் மாறியது. ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இந்த ‘மாற்றம்’ எமது எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா? என்ற கேள்விக்கு, எந்தவொரு மனச்சாட்சியுள்ள மனிதரும் “ஆம்” என்று பதிலிறுக்கமாட்டார்.


முஸ்லிம்களும் தலை கொடுக்கத் தயாராய் முன்னின்று நிகழ்த்திய இந்த மாற்றம், முன்பிருந்ததை விட சற்று அதிகமாகவே முஸ்லிம்களைப் பாதித்தது.

எனவே ‘மாற்றம்’ என்ற கருதுகோள் சிந்தனையிலும், அமைப்பு முறையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படுவதை குறித்தல் வேண்டும்.

புதிய நேரிய சிந்தனையும், புதிய ஆட்சியமைப்பு வடிவமும் தோன்றாத வரை, புதிய அல்லது பழைய நபர்கள் வெற்றுக் கோஷங்களோடு பழைய நடைமுறையைக் கடைப்பிடித்துக்கொண்டே இருப்பார்கள். இதனால் முஸ்லிம்கள் அல்லது மற்ற இன மற்றும் மத மனிதர்கள் எதிர் நோக்கும் பிரச்சினகளுக்குத் தீர்வுகள் கிடைக்க மாட்டாது.

எனவே நமது சமூகமும் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஆட்களையோ, கட்சிகளையோ பார்த்து வாக்களிக்கும் நடைமுறையை ‘மாற்றி’, கருத்துக்களை உள்வாங்கி அவற்றின் சரி பிழைகளைப் பிரித்தறிந்து வாக்களிக்கவேண்டும். இதற்கு நமது முன்தீர்மானங்களை முதலில் நாம் ‘மாற்ற’ வேண்டும். அடுத்து தீர்மானங்களை ‘மாற்ற’ வேண்டும்.

ஒற்றுமை என்பது சீரமைவிலிருந்து வேறுபட்டது

நமது சமூகம் நீண்ட காலமாக ‘ஒற்றுமை’ என்பதை ‘ஒரே விதமாகக் காணப்படுதல்’ என்று கருதி அரசியல் செயற்பாடுகளைச் செய்யப் பழக்கப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயமாகும்.

ஒரே சீருடை அணிந்த சாரணர் அணியொன்றைப் போல செயல்படுவதால், நமது ஒற்றுமையின் பலத்தை எங்கும் நிரூபிக்க முடியாது. மாறாக ஒரே செய்தியை இத்தேர்தல் மூலம் இலங்கையின் தேசிய அரசியல் அரங்குக்கும், இலங்கைத் தீவில் தமது சொந்த நலன் சார்ந்து வேலைத் திட்டங்களில் ஈடுபடும் சர்வதேச ஆதிக்க சக்திகளுக்கும் அனுப்பவேண்டும். அது – நமது சமூக அரசியலில் நாம் திடகாத்திரமாக இருக்கிறோம் என்ற செய்தியாகும்.

நமது ஆதரவை முன்னைய தேர்தல்களில் நிரூபித்துக் காட்டிய முஸ்லிம் பெருந்தலைகளை, பெருந்தேசிய மற்றும் பெரும் மதவாத சக்திகள் கைக்குள் போட்டுக்கொண்டு, முஸ்லிம் மக்களைக் கணக்கில் எடுக்கத் தேவையில்லை என்று கருதுகிறது. அதனால் நமக்கு தொடர் அநீதிகளை இழைத்து வருகிறது. இவ்வாறே சர்வதேச ஆதிக்க சக்திகளும் சிங்களப் பெருங்கட்சித் தலைவர்கள் ஊடாக நமது சமூகத்தைக் கையாளப் பழக்கியுள்ளது. தமிழ்த்தேசிய சக்திகள் அயலில் கலந்து வாழும் முஸ்லிம்களைக் கணக்கிலெடுக்காமல் செயல்படுகிறது.

எனவே இந்த சக்திகள் நமது தலைவர்களை இனி கணக்கெடுத்தால் உதவாது, முஸ்லிம் மக்களை ஏறெடுத்துப் பார்க்கவேண்டும் என்று எண்ண வைக்க வேண்டும்.
நமது சமூகத்தின் அபிலாஷைகளை கணக்கில் எடுக்கும் அரசியல் மற்றும் ராஜதந்திர சூழ்நிலையைத் தோற்றுவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் உள்ளுராட்சித் தேர்தல்கள் முடிந்த கையோடு, நாட்டில் நிகழ இருக்கும் தலைகீழான மாற்றங்களில் நமது சமூகத்தின் நலன்கள் கணக்கில் எடுக்கப்படமாட்டாது.

காத்திருக்கும் பேரழிவுகள்

நாட்டின் அரசியலமைப்பு மாற்றப்படும் போது, நமக்குப் பேரழிவுகள் காத்திருக்கின்றன. ஏற்கனவே தேசியக் கட்சிகளுக்குள் கைதிகளாக அகப்பட்டுவிட்ட நமது பிரதிதிதிகளின் ஆதரவுடன் மாகாணசபைத் தேர்தல் முறை மாற்றப்பட்டுவிட்டது. தற்போதைய தேர்தல் முடிந்தவுடன், நாடாளுமன்றத் தேர்தல் முறை மாற்றப்படப் போகிறது.

இம்மாற்றங்களால் சிங்களவர்களுக்கோ அல்லது தமிழர் அரசியலுக்கோ எவ்வித பாதிப்புமில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் என்ற ஒன்றே இல்லாது செய்யப்பட்டுவிடும். நமது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாகாணசபை உறுப்பினர் தொகை பாரிய வீழ்ச்சியடையும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத்தானும் பெறுவதற்கு எந்த உத்தரவாதமும் அற்றுப்போகும்.

அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாகத்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படும். இதில் வடக்கு – கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசையில் அணுவளவாயினும் நிறைவேற வாய்ப்பில்லை.

எனவே, எதிர்வரும் பெப்ரவரி பத்தாம் திகதி நடைபெறும் தேர்தலில் இலங்கைத் தேசமும், சர்வதேசமும் நமது தலைவர்களை அல்ல, நமது மக்களைக் கணக்கில் எடுக்கும்படியாக வாக்களித்துக் காட்டவேண்டும்.

ஐக்கிய சமாதான முன்னணி ஒரு சிறிய கட்சியாகும். ஆனால் நிமிர்ந்து நிற்கும் முதுகெலும்புள்ள கட்சி. நான் இதன் தவிசாளராகவும், சகோதரர் ஹஸனலி செயலாளர் நாயகமாகவும் இருக்கிறோம். இங்கு தனித் தலைவர் இல்லை, தலைமைத்துவ சபையும், மஷூறா மன்றமுமே உள்ளது. கடந்த 17 வருட காலங்களில் தனித் தலைவரின் தனிப்பட்ட முடிவுகளால் சமூகத்துக்கு ஏற்பட்ட நட்டங்களைக் கணக்கில் எடுத்து எமது கட்சியின் யாப்பை இவ்வாறு தயாரித்துள்ளோம்.

நான் இனி பிரதிநிதித்துவ அரசியலில் பங்கெடுப்பதில்லை என்று அறிவித்துவிட்டேன். ஹஸனலி இந்தச் சமூகத்தின் ஆவண ஞானியாவார். நாமிருவரும் புதிய சிந்தனைகளையும், சமூக அரசியலையும் நமது புதிய பரம்பரையிடம் கையளிக்கும் வேலைத் திட்டத்தில் இருக்கிறோம். இக்கட்சியை ஒரு நடமாடும் அரசியல் கல்லூரியாக வழி நடத்த ஆர்வமுடன் உழைக்கிறோம்.

எனவே எனது உடன் பிறப்புக்களே, நீங்கள் தபால் வாக்குகளை நமது  ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சின்னமான வண்ணத்துப் பூச்சிக்கு வழங்கி, உண்மையான மாற்றத்துக்கும், திடமான சமூக ஒற்றுமைக்கும் ஆணை தருமாறு வேண்டுகிறேன்.

Comments