சாய்ந்தமருது விடயத்தில் நான் துரோகமிழைக்கவில்லை: அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு

🕔 January 19, 2018

– எம்.வை. அமீர் –

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு பிரதேச சபை ஒன்றினை வழங்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார் என்று, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அம்பாறை மாவட்டத்தில் அரசியல் செய்வோர் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றியிராது விட்டால், சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை ஏற்கனவே கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளரின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கல்முனை மாநகரசபை பிரதேசத்தை நான்காகப் பிரித்து, நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதென்றால், மீண்டும் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டி தேவை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இங்குள்ள அரசியல்வாதிகள் இங்குள்ள மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு அதனை விற்பனை செய்கின்றனர்.

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையொன்றினை வழங்குவேன் என்று நானும் வாக்களித்திருந்தேன். அது நிறைவேற்றப்படாததால் என்னையும் இங்குள்ள மக்கள் துரோகியாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் துரோகியல்ல. இங்குள்ள நிலைமை என்ன என்று எனக்குத் தெரியாது. இங்குள்ள அரசியல்வாதிகள் சொல்வதைத்தான் நானும் கேட்க வேண்டியுள்ளது.

உங்களுக்கு பிரதேச சபை தருவதாக நான் வாக்குறுதி வழங்கினேன். அதன் பிறகு, அவ்வாறு வழங்க வேண்டாம் என்றும், அப்படி வழங்கினால் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் கல்முனை மக்கள் கூறினார்கள்.

இங்குள்ள அரசியல்வாதிகள் மர்ஹும் அஷ்ரப்பின் புகைப்படத்தைக் காட்டிக் கொண்டு, மக்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான அரசியல்வாதிகளை விரட்டுங்கள்.

இன்று கூட ஜனாதிபதியிடம் பேசும் போது, சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையினை அவசியம் வழங்குமாறு என்னிடம் கூறினார்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்