225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 பேர்தான் கணிணிகளை பயன்படுத்துகின்றனர்; அமைச்சர் ஹரின் கவலை

🕔 December 10, 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென்று சபையில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட மடிக் கணிணிகளில் ( 20 வீதமாவை கூட உபயோகிக்கப்படவில்லை என்று, அமைச்சர் ஹரின் பெனாண்டோ நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நிலையியல் கட்டளைகள் தொடர்பான பத்திரங்களும், நாடாளுமன்றம் தொடர்பான ஆவணங்களும் மேற்படி மடிக் கணிணிகளில் உள்ள  போதிலும், அவற்றினைப் பயன்படுத்தாமல் – மரபு ரீதியில் அச்செடுக்கப்பட்ட ஆவணங்களையே, அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மேற்படி கணிணிகளுக்கான கடவுச் சொற்களை கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறந்து விட்டதாக முறைப்பாடு செய்தமையினால், அவரவரின் விரல் அடையாளத்தை கடவுச் சொல்லாகப் பயன்படுத்தும் வகையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரீன் கூறினார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக் கணிணிகளை இயக்குவற்கு அவர்கள் பழக வேண்டுமென்றும், இதற்காக ஒரு மாத காலத்துக்கு அச்சிடப்பட்ட ஆவணங்களை அவர்களுக்கு வழங்கக் கூடாது எனவும் அமைச்சர் இதன்போது பரிந்துரைத்தார்.

நாடாளுமன்றில் பயன்படுத்துவதற்காக, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சீன அரசாங்கம் மேற்படி கணிணிகளை வழங்கியிருந்தது.

குறித்த மடிக் கணிணிகளில் 20 வீதத்துக்கும் குறைவானவையே பயன்படுத்தப்படுகிறது எனில், 225 உறுப்பினர்களில் 45 உறுப்பினர்கள் மட்டுமே அவற்றினைப் பயன்படுத்துகின்றார்கள் என்பது தெளிவாகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்