
ஈரானின் அதியுச்ச தலைவராக ஆயத்துல்லா அலி கொமெய்னியின் மகன் தெரிவு மொஜ்தபா கொமெய்னி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், “ஆயதுல்லா அலி கொமெய்னிக்கு ஏற்பட்ட அதே நிலைதான் – அவரின் மகனுக்கும் ஏற்படும்” என டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா-இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில், ஆயத்துல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்ட நிலையில், 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் குழுவால் மொஜ்தபா கொமெய்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆயத்துல்லா அலி கொமெய்னியின் இரண்டாவது மகனான மொஜ்தபா காமனேயி (வயது 56),1969இல் ஈரானின் மஷாத் நகரில் பிறந்தார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன், இஸ்லாமிய ராணுவப் படையில் இணைந்த மொஜ்தபா காமனெயி 1980 முதல் 1988 வரை ஈரான்- ஈராக் போரில் பணியாற்றினார்.
ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் நெருக்கத்தை கொண்டிருந்த மொஜ்தபா, ஈரான் அரசியலில் பெரும்பாலும் திரைக்குப் பின்னாலேயே இயங்கியதாகவும், மறைந்த ஆயதுல்லா அலி கொமெய்னியின் அலுவலகத்தை நிழல்போல நிர்வகித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
2024இல் ஈரானின் அடுத்த அதி உயர் தலைவர் குறித்து ஈரானின் நிபுணர்கள் சபை விவாதித்தபோது, ‘தனது மகனை அந்தப் பரிசீலனையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்,’ என்று அப்போது ஆயதுல்லா அலி கொமெய்னி கூறியிருந்தார். எனினும், தற்போது மொஜ்தபா கொமெய்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மொஜ்தபா கொமெய்னியின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் முழுமையான கீழ்ப்படிதலுக்கும், சுய தியாகத்திற்கும் தயாராக இருப்பதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது. அதேபோல், ஈரான் ஆதரவு போராளிக் குழுவான ஹிஸ்பொல்லாவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில், “ஆயதுல்லா அலி கொமெய்னிக்கு ஏற்பட்ட அதே நிலைதான் அவரின் மகனுக்கும் ஏற்படும்” என – டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.


