தலைப்புச் செய்திகள்

நீண்ட இழுபறிக்குப் பின்னர், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் றியாஸ் ஆதம் தெரிவு

– நூருல் ஹுதா உமர் –

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவிற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல். அஸ்மி தலைமையில் இன்று (09) நடைபெற்றது

முன்னாள் தவிசாளரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமையினால், தவிசாளர் பதவி காலியாகியதையடுத்து – புதிய தவிசாளரை தேர்வு செய்ய சபைக் கூட்டம் அழைக்கப்பட்டது.

ஆனால் முதல் இரு அமர்வுகளில் தவிசாளர் தேர்வு நடைபெறவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் சபை உறுப்பினர்கள் போதுமான எண்ணிக்கையில் கலந்து கொள்ளாததால் – கோரம் இல்லாமை காரணமாக தவிசாளர் தெரிவு இடம்பெறவில்லை.

நிந்தவூர் பிரதேச சபையில் பல கட்சிகள் உறுப்பினர்களைக் கொண்டுள்ளமையினால், யார் தவிசாளராக வர வேண்டும் என்ற விவகாரத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லாமல் இருந்தது. இதனால் இரண்டு முறை தவிசாளர் தெரிவு இழுபறியாகியது.

தவிசாளர் இல்லாததால் சபையின் நிர்வாக நடவடிக்கைகள் சீராக நடைபெறவில்லை. குறிப்பாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் (Budget) கூட முன்வைக்கப்படாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலை காரணமாக, தவிசாளர் தேர்வு நடைபெறும் வரை சில நிர்வாகப் பொறுப்புகளை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதற்குப் பிறகே இறுதியாக இன்று (09) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு நடைபெற்றது.

இரு தடவை இழுபறியில் நிலவிய நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு, இன்று (09) நடைபெற்றதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி றியாஸ் ஆதம் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் – கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல். அஸ்மி தலைமையில் நடைபெற்ற இத்தெரிவு நடவடிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 06 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சுலைமான் சாபி கலந்துகொண்ட நிலையில் – கோரம் உருவாகி தவிசாளர் பதவிக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற இரண்டு அமர்வுகளிலும் பல்வேறு காரணங்களால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமையால் தவிசாளர் தெரிவு இடம்பெறாமல் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது.

இதனால் பிரதேச சபையின் நிர்வாக நடவடிக்கைகள் தாமதமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.