தலைப்புச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்புக்காக வாகனங்களைக் கோரினால், ஏற்பாடு செய்யப்படும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாது என்று அர்த்தமல்ல என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இன்று (07) உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார்.

சில முன்னாள் ஜனாதிபதிகள் ஏற்கனவே தங்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களைத் திருப்பித் தந்துள்ளனர் என்றும், ஆனால் இது ரத்து செய்யப்பட்ட சலுகைகள் சட்டத்தின் கீழ் வராது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகவே உள்ளது என்றும், பாதுகாப்பு தொடர்பான வாகனங்கள் அல்லது பிற தேவைகள் தொடர்பில் ஏதேனும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டால், தற்போதைய நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்யத் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதிப்படுத்தினார்.