தலைப்புச் செய்திகள்

போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக கும்பலுடன் தெற்கு அரசியல்வாதிகளுக்கு தொடர்பு: அமைச்சர் தகவல்

தென் மாகாணத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொது பாதுகாப்பு அமைச்சர்; உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்களைப் பெற்றுக் கொண்டாக கூறினார்.

கடந்த கால அரசியல் கலாச்சாரத்தின் விளைவாக, பாதாள உலகமும் போதைப்பொருள் வலையமைப்புகளும் விரிவடைந்துள்ளன என்றும், ஆனால் தற்போதைய அரசாங்கம் இப்போது இந்த நடவடிக்கைகளை அகற்றுவதில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தங்கல்லையில் இன்று மூன்று பெரிய போதைப்பொருள் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது அமைச்சர் கூறினார்.

“பொதுமக்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. கடுமையான போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் – குறிப்பாக தெற்கிலிருந்து வரும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட – அரசியல் தொடர்புகளைக் குறிக்கும் சில தகவல்கள் இப்போது எங்களிடம் உள்ளன” என்றும் அவர் தெரிவித்தார்.

“பொதுமக்கள் தகவல்களைத் தீவிரமாக வழங்குகிறார்கள். பொலிஸார் தங்கள் பணியை விடாமுயற்சியுடன் செய்கிறார்கள். மேலும் புலனாய்வு அமைப்புகள் அதிக அளவிலான தரவுகளைப் பெறுகின்றன. தங்களிடம் உள்ள எந்தவொரு தகவலையும் பொலிஸாருடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். தகவல் மற்றும் அதை வழங்குபவர்களின் அடையாளம் இரண்டும் பாதுகாக்கப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்றார்.

இந்தோனேசியாவில் கைது செய்து – இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் அறியப்பட்ட உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் பிற பாதாள உலகக் குற்றவாளிகளிடமிருந்து போதைப்பொருள் தொடர்பான முக்கிய தகவல்கள் இப்போது வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அவர்கள் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.