தலைப்புச் செய்திகள்

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் பெயர் மாற்றியுள்ளது தெரியும்: அந்தப் பெயர் இதுதான்

த்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் தனது பெயரை ‘ஹர்ஜன் அலெக்சாண்டர்’ என, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சிங்கப்பூரிலிருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் செயல்முறைக்கு சட்டரீதியான தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான சட்டரீதியான வழிகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.

சிங்கப்பூர் குடிமகனாக சிங்கப்பூரில் வசித்து வரும் மகேந்திரன், தனது பெயரைக்கூட மாற்றியுள்ளார் என்று , இந்த வாரத் தொடக்கத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போது, அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியிருந்தார்.

இதற்கிடையில், மத்திய வங்கி பிணை முறி மோசடி வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய – இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரிய பின்னர், மகேந்திரன் தனது பெயரை ‘ஹர்ஜன் அலெக்சாண்டர்’ என மாற்றியுள்ளார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

சிங்கப்பூரின் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் உள்ள சட்டத் தேவைகளை, இந்தக் கோரிக்கை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, மகேந்திரனை நாடு கடத்துவதற்கான இலங்கையின் கோரிக்கையை சிங்கப்பூர் முன்னர் நிராகரித்திருந்தது.

மத்திய வங்கிப் பிணை முறி பரிவர்த்தனைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, அர்ஜுன மகேந்திரன் இலங்கையில் தேடப்பட்டு வருகிறார்.

அரசுக்கு 11 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்பை (இலங்கை மதிப்பில் 360 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை) ஏற்படுத்தியதற்காக, 2019 ஜூன் மாதம் நிரந்தர மேல் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.