
உலக நாடுகளில் தனிநபர்கள் மாதந்தம் பெறும் குறைந்தளவு ஊதியங்களை அடிப்படையாகக் கொண்டு 130 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளதில் இலங்கை 120வது இடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரவுகளின் அடிப்படையில், விஷுவல் கேபிடலிஸ்ட் (Visual Capitalist) வெளியிட்ட சமீபத்திய ஒப்பீட்டு உலக குறைந்தபட்ச ஊதிய அறிக்கையில், இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இலங்கையின் மாதாந்த குறைந்தபட்ச ஊதியம் 200 அமெரிக்க டொலராக உள்ளது. இதன்படி, உலக அளவில் மிகக் குறைந்த ஊதியம் வாங்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகவுள்ளது.
ஆசியாவில் தென்கொரியா 2,362 அமெரிக்க டொலர் என்ற மிக உயர்ந்த குறைந்தபட்ச ஊதியத்தைப் பதிவுசெய்து, உலகளவில் 11வது இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜப்பான் 1,839 அமெரிக்க டொலருடன் 16வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
தெற்காசிய நாடுகளில், இலங்கை மிகக் குறைந்த இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 68வது இடத்திலும் (570 அமெரிக்க டொலர்), நேபாளம் 78வது இடத்திலும் (490 அமெரிக்க டொலர்), வங்கதேசம் 89வது இடத்திலும் (379 அமெரிக்க டொலர்), மற்றும் இந்தியா 111வது இடத்திலும் (233 அமெரிக்க டொலர்) உள்ளன.
உலகளவில், சுவிட்சர்லாந்து மாதத்திற்கு ஆகக்குறைந்தது 3,804 அமெரிக்க டொலர்களைப் பெறும் நாடாக, இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது.
முதல் பத்து இடங்களைப் பிடித்த மற்ற நாடுகளில் ஜேர்மனி (USD 2,928), ஐக்கிய ராச்சியம் (USD 2,902), நெதர்லாந்து (USD 2,876), அவுஸ்ரேலியா (USD 2,819), பெல்ஜியம் (USD 2,752), ஐஸ்லாந்து (USD 2,730), நியூசிலாந்து (USD 2,673), பிரான்ஸ் (USD 2,465) மற்றும் அயர்லாந்து (USD 2,433) ஆகியவை அடங்கும்.
இந்தக் குறியீட்டில் இலங்கைக்குக் கீழே பத்து நாடுகள் மட்டுமே தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவை நைஜர், பூட்டான், ஹைட்டி, கினியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சியரா லியோன், கானா, கிர்கிஸ்தான், கினியா-பிசாவ் மற்றும் காம்பியா ஆகியவையாகும். இதில் காம்பியா USD 67 என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையைப் பதிவு செய்தது.
இந்த மதிப்புகள் நேரடி அமெரிக்க டொலர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டிராமல், உள்நாட்டு வாங்கும் சக்தி சமநிலையின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. இந்த புள்ளிவிவரங்களில் வரிகள் அல்லது மேலதிக கொடுப்பனவுகள் சேர்க்கப்படவில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.



