
இலங்கை ரயில்வே (SLR) தனது ஊழியர்கள் – பணி நேரத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் ஒரு விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
ரயில்வே செயல்பாடுகள் தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவதையும் இந்த சுற்றறிக்கை தடுக்கிறது.
சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி நேரத்திலும், தங்களின் உத்தியோகபூர்வ கடமைகள் தொடர்பான சந்தர்ப்பங்களிலும் சமூக ஊடகங்கள் மூலம் – முக்கிய தகவல்களை வெளியிடும் போக்கு அதிகரித்து வருவதைக் கவனித்த பின்னரே, இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
அவ்வாறு முக்கிய தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது, ரயில்வே சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவற்றை கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று அந்தத் துறை குறிப்பிட்டுள்ளது.
புதிய சுற்றறிக்கையின்படி, இலங்கை ரயில்வேயின் பொது முகாமையாளர், அதன் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே வெளித் தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ உத்தியோகபூர்வ தகவல்களை வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரயில்வேயின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்தச் சுற்றறிக்கையில், அதன் அறிவுறுத்தல்களை மீறும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



