தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியவுடன், மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும்: அமைச்சர் நளிந்த

தேவையான சட்டங்களுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியவுடன், மாகாண சபைத் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவதே – அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற ஊடக சந்திப்பில் நேற்று (25) கலந்து கொண்டு பேசிய அமைச்சர், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தேவையான சட்டங்களைக் கருத்தில் கொண்டு, வரைவு செய்ய நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, தனது பணியை முடிக்க வேண்டும் என்றும், கூடிய விரைவில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கம் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“மாகாண சபைகளால் மேற்கொள்ளப்பட வேண்டிய பல திட்டங்கள் உள்ளன. தற்போது மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களால் மேற்கொள்ளப்படக்கூடிய பணிகளை அந்தந்த அமைச்சுக்களே கையாள வேண்டும்” என்று அவர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாஹச்சி வெளியிட்ட கருத்துக் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்; மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் தாமதப்படுத்தவில்லை என்றும், கொட்டாஹச்சி கூறியது மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.

மாகாண சபை தேர்தல்களை நடத்துவது அரசாங்கத்தின் முழுப் பொறுப்பு அல்ல என்றும், அனைத்து அரசியல் கட்சிகளின் அங்கிகாரத்துடன் இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எல்லை நிர்ணய செயல்முறை குறித்து அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாகவும், தேர்தல்களை நடத்துவதற்கு முன்பு அத்தகைய பிரச்சினைகள் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.