
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அமைப்பிலுள்ள ஊடகவியலாளர்கள் – வெளிநாட்டு உளவு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக, கலாநிதி ரவூப் ஸெய்ன் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு தொடர்பில் விளக்கம் கோரி, அவருக்கு – ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் உத்தியோகபூர்வமாக கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவராலயங்களுடன் இணைந்த வகையில் இயங்கும், சில வெளிநாட்டு உளவு நிறுவனங்களுக்கு – உளவுத் தகவல்களை சில முஸ்லிம் ஊடகவியலாளர்கள் வழங்குவதாகவும், அவ்வாறான ஊடகவியலாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்- அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர் என்றும், ரவூப் ஸெய்ன் – தனது பேஸ்புக் பக்கத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து, அவர் முன்வைத்த குற்றச்சாட்டினால், அமைப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் உறுப்பினர்கள் பலரும், அமைப்பின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இதனையடுத்து, இது குறித்து செயற்குழுவில் ஆராயப்பட்டு விளக்கம் கோரும் கடிதம் – ரவூப் ஸெய்ன்-க்குஅனுப்பப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், கலாநிதி ரவூப் ஸெய்ன் வெளியிட்ட அந்தப் பதிவை பின்னர் நீக்கி விட்டமை குறிப்பிடத்தக்கது.



