தலைப்புச் செய்திகள்

‘ஆண்களுக்கு மட்டும் புதையிரத மாஸ்டர் பதவி’: எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதி

இலங்கை புகையிரத நிலைய மாஸ்டர் பதவி வெற்றிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனும் வர்த்தமானி அறிவிப்பை எதிர்த்து, இரண்டு பெண்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரிப்தற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்யும் மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை செய்யும் அரசியலமைப்பின் பிரிவுகள் 12(1) மற்றும் 12(2) இன் கீழ், தங்கள் அடிப்படை உரிமைகளை குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீறுவதாகக் கூறி, அயேஷானி ஜெயவர்தன மற்றும் சுரேஷ் விதுஷா ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை புகையிரத திணைக்களத்தில் காணப்படும் 106 புகையிரத நிலைய மாஸ்டர் வெற்றிடங்களுக்கு ‘ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்’ விண்ணப்பிக்க முடியும் என்று, இவ்வருடம் ஜூன் 13ஆம் அன்று விளம்பரம் வெளியிடப்பட்டது.

புகையிரத திணைக்களத்தின் இந்த முடிவு, பாலின பாகுபாட்டைக் குறிப்பதாகவும், தாம் விரும்பும் வேலையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மீறுகிறது என்றும் மனுதாரர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

பெண் விண்ணப்பதாரர்களை விலக்கும் வர்த்தமானியின் பிரிவு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர்கள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பாலின-குறிப்பிட்ட பிரிவை நீக்கி, அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோருகின்றனர்.

உண்மைகளைக் கருத்தில் கொண்டு, நீதிபதிகள் ஏ.எச்.எம்.டி. நவாஸ், பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மனுவைத் தொடர அனுமதி அளித்து, வழக்கை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.