
ராஜாங்கனே சத்தாரதன தேரரை உளப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் தேரரை பரிசோதனைக்கு உட்படுத்தி, இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தேரரின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஏதேனும் ஆபாச சொற்கள் உள்ளனவா என்பதை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜாங்கனே சத்தாரதன தேரர் தற்போது நிபந்தனை பிணையில் உள்ளார். அவர் ஆபாச மொழியைப் பயன்படுத்துவதையும் நீதிமன்றம் தடை செய்துள்ளது.
மத சகவாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பௌத்தத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்தப் பின்னணியில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இலங்கை ராமண்ண மகா நிகாய சபை, பௌத்த துறவிகள் சங்கத்தில் இருந்து ராஜாங்கனே சத்தாரதன தேரரை வெளியேற்ற முடிவு செய்தது.
தேரர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய அறிக்கைகளைத் தொடர்ந்து, அந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.



